சென்னை:
பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும், விதிமீறிச் செல்லும் வாகன ஓட்டிகளை கண்காணிக்கவும், ஈசிஆர் சாலை எனப்படும் கிழக்கு கடற்கரைச் சாலையில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பபட்டுள்ளது.
உயர்தொழில் நுட்பமும், தெளிவான திறனும், வாகனங்களின் நம்பர் பிளேட்டை பதிவு செய்யும் வகையிலான (ANPR) தானியங்கி காமிராக்களின் செயல்பாடுகளை கண்காணிக்கும் அறை அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், கிழக்கு கடற்கரைச் சாலையில் முட்டுக்காட்டில் புறக்காவல் நிலையம் அமைக்கப் பட்டுள்ளது. அதன் திறப்பு விழா மற்றும், நீலாங்கரை, கானத்தூர் பகுதியில் 209 கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடு தொடக்க விழா, வாகனப் பதிவு எண்ணை அடையாளம் கண்டு எச்சரிக்கும் 8 ஏ.என்.பி.ஆர்., கேமரா தொடக்க விழா ஆகியவை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளில் சென்னை மாநக காவல் ஆணையர் ஏ.கே. விசுவநாதன் கலந்துகொண்டு காமராவின் செயல்பாடுகளை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய ஆணையர் விசுவநாதன், ஈசிஆர் சாலையான நீலாங்கரை பகுதியில் சுமார் 3ஆயிரம் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளன. சென்னைக்குள் இப்போது 50 மீட்டருக்கு ஒரு கண்காணிப்பு கேமரா உள்ளது. கண்காணிப்பு கேமரா மூலம் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருமளவு குறைந்துள்ளது என்றும், தங்கச் சங்கிலி பறிப்பு, மொபைல் பறிப்பு போன்றவை 50 சதவீதத்துக்கும் கீழே குறைந்துள்ளது என்று தெரிவித்தார்.
மேலும் குற்றங்களில் ஈடுபடுபவர்களும் காமிராவின் உதவியால் உடனடியாக கைது செய்யப்பட்டு வருகின்றனர் என்றவர், வளரும் தொழில்நுட்பத்தை காவல்துறையில் பயன்படுத்தி, பணிச்சுமையை குறைத்து,திறனை அதிகரிப்பதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அதே வேளையில், பொதுமக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுகிறது என்றார்.
சென்னையில் ஒவ்வொரு வீட்டிலும்,கடையிலும் கண்காணிப்பு கேமரா இருக்க வேண்டியது அவசியம் என்று கூறியவர், தற்போது இங்க தொடங்கி வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு காமிரா மூலம், கிழக்கு கடற்கரை சாலையில் வாகனங்கள் வேகமாக செல்வது உள்ளிட்ட போக்குவரத்து மீறல்களைக் கட்டுப்படுத்தமுடியும் என்றும் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில், சட்டம் மற்றும் ஒழுங்கு தெற்கு கூடுதல் ஆணையர் பிரேம்ஆனந்த் சின்ஹா மற்றும், தெற்கு மண்டல இணை ஆணையர் மகேஸ்வரி ,துணை ஆணையர் பகலவன், உதவி ஆணையர்கள் பி.கே.ரவி,வினோத் சாந்தாராம், லோகநாதன், நீலாங்கரை உதவி ஆணையர் விஸ்வேஸ்வரய்யா உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.