சென்னை: அதிகவட்டி மோசடி என கூறி மக்களை ஏமாற்றிய பிரபலமான நியோமேக்ஸ் நிறுவனத்தின் ரூ.600 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட நியோமேக்ஸ் நிதி நிறுவனம் தமிழ்நாடு முழுவதும் கிளைகளைத் திறந்து, அதிக வட்டி தருவமாக பொதுமக்களை ஏமாறறி  ரூ.100 கோடிக்கு மேல் மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக  மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில்,  ‘நியோமேக்ஸ்’ நிறுவனம் மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, திருவாரூர், திருச்சி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு பெயர்களில் கிளை நிறுவனங்களைத் தொடங்கி செயல்படுத்தி வந்தது தெரிய வந்தது. இவர்கள்  மக்களிடையே ஆசையை தூண்டும் வகையில், தங்களது   நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் பணத்தினை இரட்டிப்பாக தருவதாகவும் மாதம் 12 முதல் 30 சதவீத  வட்டி தருவதாகவும் தெரிவித்தனர். இதனால் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு எப்போதும்போல, தமிழக மக்கள் விட்டில் பூச்சிகளாக,  நியோமேக்ஸ் நிறுவனத்தில் பல கோடி ரூபாய் வரை முதலீடு செய்துள்ளனர். ஆனால், நியோமேக்ஸ் நிறுவனம், தாங்கள் கூறியபடி, முதலீடை திருப்பி தராமலும், வட்டியை வழங்காமலும் ஈடுபட்டு வந்தது. இந்த நிதி நிறுவனத்தை சேர்ந்தவர்கள் திமுகவை சேர்ந்தவர்கள் என்பதால், பொதுமக்களை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து இந்த மோசடி தொடர்பாக   சிலர் புகார் அளித்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில் நியோமேக்ஸ் நிறுவனத்தின் இயக்குநரான  வீரசக்தி, கமலக்கண்ணன், பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட சிலர் மீது பொருளாதார குற்றப்பிரிவினர் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இந்த நிதி நிறுவனத்திற்கு சொந்தமான கிளை நிறுவனங்களான 17 நிறுவனங்கள் சீல் வைக்கப்பட்டு விலையுயர்ந்த கார்கள், தங்கம், ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு இருந்தது.

இதையடுத்து, இந்த விவகாரத்தில் அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது. நியோமேக்ஸ் நிறுவனம் ஆயிரக்கணக்கான முதலீட்டாளர்களிடம் பணத்தை பெற்று பினாமி நிறுவனங்கள் மூலம் சட்டவிரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. குறிப்பாக, நிலங்கள் வாங்குவதற்காக கணிசமான நிதியை வேறு நிறுவனங்களுக்கு மாற்றியிருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, நியோமேக்ஸ் நிறுவனத்தின் ரூ.207 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை கடந்த 2023-ம் ஆண்டு முடக்கியது.

இதன் தொடர்ச்சியாக, நியோமேக்ஸ் நிறுவனத்தின் ரூ.600 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை தற்போது முடக்கியுள்ளது. இதுகுறித்து அமலாக்கத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

நியோமேக்ஸ் மற்றும் அதன் குழும நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான முதலீட்டாளர்களிடம் இருந்து பெருமளவு பணத்தை பெற்று, அந்த பணத்தை பினாமி நிறுவனங் கள் மூலம் பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது. அந்த வகையில், நியோமேக்ஸ் நிறுவனம், முதலீட்டாளர்களுக்கு வாக்குறுதி அளித்த தொகை உட்பட சுமார் ரூ.8,000 கோடி வரை கடன்பட்டுள்ளது.

இந்த நிலையில், தொடர் விசாரணையின் அடிப்படையில், நியோமேக்ஸ் நிறுவனம் மற்றும் அதன் குழும நிறுவனங்களான கார்லண்டோ ப்ராப்பர்ட்டீஸ், ட்ரான்ஸ்கோ ப்ராப்பர்ட்டீஸ், ட்ரைடாஸ் ப்ராப்பர்ட்டீஸ், குளோமேக்ஸ் ப்ராப்பர்ட்டீஸ் மற்றும் அதன் இயக்குநர்கள், பங்குதாரர்களான கமலக்கண்ணன், பாலசுப்பிரமணியன், வீரசக்தி, சார்லஸ் மற்றும் தொடர்புடையவர்களின் ரூ.121.80 கோடி மதிப்புள்ள அசையும், அசையா சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. இதன் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.600 கோடி ஆகும். இதுதொடர்பாக மேலும் விசாரணை நடந்து வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நியோமேக்ஸ் மோசடி வழக்கு: கம்பம் திமுக நகர செயலாளர் செல்வக்குமார் நீதிமன்றத்தில் சரண்!

ரூ.100 கோடி பொதுமக்கள் பணம் அபேஸ்: பிரபல பிரணவ் ஜுவல்லரி மூடல்?