மதுரை: நியோமேக்ஸ் நிதிநிறுவன மோசடி வழக்கு தொடர்பாக கம்பத்தைச் சேர்ந்த திமுக நகர செயலாளர் செல்வக்குமார் உசிலம்பட்டி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சரண்டைந்தார்.

மதுரையில் ‘நியோ மேக்ஸ்’ ரியல் எஸ்டேட் மோசடி வழக்கில் அந்நிறுவனத்தின் இயக்குநர், முகவர் உட்பட  6 பேர் கைது செய்யப் பட்டுள்ள நிலையில்,  தற்போது, கப்பம் பகுதி திமுக நகரசெயலாளர் செல்வக்குமார் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். அவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ள நிலையில் விசாரணை மேலும் தீவிரமடைந்துள்ளது.

மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ‘நியோமேக்ஸ்’ நிறுவனம் மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, திருவாரூர், திருச்சி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு பெயர்களில் கிளை நிறுவனங்களைத் தொடங்கி செயல்படுத்தி வந்திருக்கின்றனர்.

இவர்கள் மக்களிடையே ஆசையை தூண்டும் வகையில், தங்களது   நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் பணத்தினை இரட்டிப்பாக தருவதாகவும் மாதம் 12 முதல் 30 சதவீத  வட்டி தருவதாகவும் தெரிவித்தனர். இதனால் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு எப்போதும்போல, தமிழக மக்கள் விட்டில் பூச்சிகளாக,  நியோமேக்ஸ் நிறுவனத்தில் பல கோடி ரூபாய் வரை முதலீடு செய்துள்ளனர்.

ஆனால், நியோமேக்ஸ் நிறுவனம், தாங்கள் கூறியபடி, முதலீடை திருப்பி தராமலும், வட்டியை வழங்காமலும் ஈடுபட்டு வந்தது. இந்த நிதி நிறுவனத்தை சேர்ந்தவர்கள் திமுகவை சேர்ந்தவர்கள் என்பதால், பொதுமக்களை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து இந்த மோசடி தொடர்பாக   சிலர் மதுரை  பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில் நியோமேக்ஸ் நிறுவனத்தின் இயக்குநரான  வீரசக்தி, கமலக்கண்ணன், பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட சிலர் மீது பொருளாதார குற்றப்பிரிவினர் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இந்த நிதி நிறுவனத்திற்கு சொந்தமான கிளை நிறுவனங்களான 17 நிறுவனங்கள் சீல் வைக்கப்பட்டு விலையுயர்ந்த கார்கள், தங்கம், ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு இருந்தது.

இதைத் தொடர்ந்து குற்றவாளிகளை கைது செய்ய பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த போது கடந்த சில மாதங்களுக்கு முன்பு நியோமேக்ஸ்  நிறுவனத்தின் இயக்குநர்களான சைமன் ராஜா, கபில், இசக்கி முத்து, சகாயராஜா ஆகிய 4 பேரையும்  பொருளாதார குற்றப்பிரிவு தனிப்படை காவல்துறையினர் கைது செய்து  சிறையில் அடைத்தனர்.

மேலும் நியோமேக்ஸ் நிதி நிறுவனத்தின் வழக்கில் முக்கிய குற்றவாளிகளான வீரசக்தி, கமலக்கண்ணன் பாலசுப்பிரமணியன் ஆகியோரை கைது செய்ய வேண்டுமென விமான நிலையங்களுக்கு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக தமிழகம் முழுவதும் 11 பேர் கைது செய்யப்பட்டு 92 பேர் வழக்கில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளதாகவும், இதுவரை 17.25 கோடி மதிப்பிலான 752 வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் இந்த நியோமேக்ஸ் மோசடி தொடர்பாக  கம்பத்தைச் சேர்ந்த திமுக தெற்கு நகர செயலாளர் செல்வக்குமார் என்பவர்  மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில்  சரண்டைந்தார்., இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மகாராஜன், திமுக நகர செயலாளர் செல்வக்குமாரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளளார்.