சென்னை:

கும்பகோணம் தீ விபத்து வழக்கில் அனைவரும் விடுதலை செய்து சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது.

கும்பகோணம் கிருஷ்ணா அரசு உதவி பெறும் பள்ளியில், 2004 ஜூலை 16இல் தீ விபத்து ஏற்பட்டது. 94 குழந்தைகள் தீயில் கருகி பலியானார்கள். 18 பேர் காயமடைந்தனர்.

பள்ளி நிறுவனர் புலவர் ரா.பழனிச்சாமிக்கு ஆயுள் தண்டனை, பள்ளி தாளாளர் சரஸ்வதி, தலைமை ஆசிரியை சாந்த லட்சுமி, சத்துணவு அமைப் பாளர் விஜயலட்சுமி, சமையலர் வசந்தி, தஞ்சாவூர் மாவட்ட துவக்கக் கல்வி அலுவலர் பாலாஜி, துவக்கக் கல்வி அலு வலக உதவியாளர் சிவபிரகா சம், கண்காணிப்பாளர் தாண்ட வன், துவக்க கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் துரைராஜ் ஆகியோருக்கு தலா ஐந்து வருடங்கள் , கட்டட பொறி யாளர் ஜெயச்சந்திரனுக்கு இரண்டு வருடங்கள் தண்டனை விதித்து 2014 ஜூலை 30இல் தஞ்சாவூர் முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

தண்டனையை ரத்து செய்யக்கோரி புலவர் பழனிச்சாமி, சரஸ்வதி உட்பட 10 பேர், சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் மேல் முறையீடு செய்தனர்.

முன்னாள் மாவட்ட துவக்கக் கல்வி அலுவலர் பி.பழனிச்சாமி, மாவட்டக் கல்வி அலுவலர் நாராயணசாமி உட்பட 11 பேரை, கீழமை நீதிமன்றம் விடுதலை செய்தது. இதை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்தது.

முதுமை, உடல்நலம் காரணங்கள் அடிப்படையில் தண் டனையை நிறுத்தி வைக்க உத்தரவிடக்கோரி புலவர் பழனிச்சாமி உட்பட 10 பேரும் மனு செய்திருந்தனர். (இவர்களில் சரஸ்வதி 2016இல் மரணமடைந்தார்.)

புலவர் பழனிச்சாமி உட்பட 9 பேரின் தண்டனையை நிறுத்தி வைத்து, நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், வி.எம்.வேலுமணி அமர்வு 2016 நவம்பரில் உத்தரவிட்டது. இரு நீதிபதிகளும் பணிச் சுழற்சியின் காரணமாக, தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை விசாரித்தனர்.

தண்டனையை ரத்து செய்யக்கோரும் மனுக்கள் மற்றும் அரசின் மேல்முறையீட்டு மனுக்கள், இறுதி சிறப்பு விசாரணைக்காக உயர்நீதி மன்ற மதுரைக் கிளையில், பட்டியலிடப்பட்டன. நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், வி.எம்.வேலுமணி அமர்வு விசாரித்தது.

அரசுத் தரப்பில், கீழமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த 565 ஆவணங்கள், 229 சாட்சியங்கள் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள எந்தெந்த நபர்களுக்கு தொடர்புடையதாக இருக்கின்றன என்பது குறித்த சந்தேகங்களை எழுப்பினர். மனுதாரர்கள், அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. நீதிபதிகள் தீர்ப்பை ஒத்தி வைத்தனர்.

இந்த நிலையில் இன்று இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். தீர்ப்பின் முழு விவரங்கள் விரைவில் வெளியாகும்.