மதுரை: மதுரை மாநகராட்சியில் கடந்த 10 ஆண்டுகளில்  நடைபெற்றுள்ள  சொத்து வரி முறைகேடுகளையும் விசாரிக்கலாம் என்றும்,   தேவைப்படும் பட்சத்தில் புதிதாக வழக்குப்பதிவு செய்யலாம்  என உயர்நீதிமனற்ம் மதுரை கிளை பச்சைக்கொடி காட்டி உள்ளது.

மதுரை மாநகராட்சி திமுக வசம் உள்ளது.  மாநகராட்சி மேயராக  திமுகவைச் சேர்ந்த இந்திராணி இருந்து வருகிறார். இவரது கணவரின் மேற்பார்வையில், மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 150 கோடி ரூபாய்க்கு சொத்து வரி ஊழல் நடந்துள்ளது அம்பலமாகி உள்ளது.   தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக டிஐஜி அபினவ் குமார் தலைமையிலான குழு விசாரித்து வருகிறது. இந்த ஊழலில் தொடர்புடையதாக மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்த் சென்னையில் கைது செய்யப்பட்டார். அவரை மதுரைக்கு அழைத்து வந்து  விசாரித்து வருகின்றனர். இந்த விஷயத்தில் பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில்,   மதுரை மாநகராட்சி அ.தி.மு.க., கவுன்சிலர் ரவி தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, மதுரை மாநகராட்சியின் கடத் 10 ஆண்டுகளில் நடைபெற்ற வரி முறைகேடு குறித்தும் விசாரிக்க உத்தரவிட்டு உள்ளது.

முன்னதாக, கவுன்சிலர் ரவி தாக்கல் செய்த மனுவில், “மாநகராட்சி அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் மேயர் மற்றும் மண்டல தலைவர்கள் சொத்துவரி நிர்ணயத்தில் மோசடி செய்துள்ளனர். 2022 முதல் 2024 வரை, சம்பந்தப்பட்ட அதிகாரியின் ஒப்புதல் இன்றி, வணிக வரி விகிதத்தை வீட்டு வரியாக மாற்றியுள்ளனர். இதனால் மாநகராட்சிக்கு ரூ.200 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது”.

இதுதொடர்பாக,   மாநகராட்சி கமிஷனர், 2024 செப்டம்பர் 10-ஆம் தேதி, மதுரை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார். ஆனால்,  அதன்மீது நடவடிக்கை எடுக்காத நிலையில், இந்த விவகாரம் பூதாரகமான பிறகே சுமார் எட்டு மாதங்களுக்குப் பிறகு , 2025 ஜூன் 17-ஆம் தேதி வழக்கு பதிவு செய்ய நகர மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவு வழங்கப்பட்டது.  எனினும், உண்மையான குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த விஷயம் விவகாரமானதும்,   முதல்வர் தலையீட்டின் பின்னர், ஐந்து மண்டல தலைவர்கள், இரண்டு நிலைக்குழு தலைவர்கள் ராஜினாமா செய்தனர். ஆனால், அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால், இந்த வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த மனுமீதான விசாரணை  நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், ஜி. அருள்முருகன் அமர்வி விசாரணை நடத்தியது. இதையடுத்து,  மதுரை டி.ஐ.ஜி அபிநவ் குமார் தலைமையில்   மதுரை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள ஒட்டுமொத்த அசையா சொத்துக்களுக்கு முறையாக வரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்து உறுதிப்படுத்த சிறப்பு குழு அமைக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

இதுகுறித்த விவரங்களை மாநகராட்சி கமிஷனரிடம் இருந்து பெற்று, அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையின்போது, தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரா கதிரவன், கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் செந்தில்குமார் ஆகியோர், “இதுவரை 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிலர் கைதாக வாய்ப்புள்ளது. 5000 வணிக கட்டடங்களில், 150 கட்டடங்களின் சொத்துவரி கணக்கில் ரூ.2 கோடி வசூலிக்கப்படாமல் இருந்தது. தற்போது அந்தத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது

. யார் தவறு செய்திருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும். சைபர் கிரைம் போலீஸ் நிபுணர்களின் உதவியுடன் விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் வரி குறைப்பு, வரி ஏய்ப்பு குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது” என தெரிவித்தனர்.

இந்த நிலையில் கடந்த ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த மனுதாரர் தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது. அதற்கு முறைகேடுகள் எப்பொழுது நடந்தாலும் தவறு தான். அதனை விசாரிப்பதில் உங்களுக்கு என்ன பிரச்சனை என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

பின்னர் கடந்த 10 ஆண்டுகளில் நடந்த சொத்து வரி முறைகேடுகளையும் விசாரிக்கலாம். தேவைப்படும் பட்சத்தில் புதிதாக வழக்குப்பதிவு செய்யலாம் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ரூ. 200 கோடி வரி முறைகேடு: மதுரை மாநகராட்சி திமுக பெண் மேயரின் கணவர் கைது…

மதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி வரி முறைகேடு! மேலும் 4 ஊழியர்கள் பணிநீக்கம்….