சென்னை: முன்னாள் அதிமுக அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி வழக்கில், காவல்துறையினரின் நடவடிக்கையை கடுமையாக விமர்சனம் செய்த நீதிபதிகள், அந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க உத்தரவிட்டு உள்ளது. இது தமிழ்நாடு அரசுக்கு தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, தமிழக காவல்துறையின் நடவடிக்கை கடும் விமர்சனங்களை பெற்று வருகிறது. ஏற்கனவே சொத்துக்குவிப்பு வழக்குகளில் இருந்து அமைச்சர்கள் விடுவிக்கப்பட்டது சலசலப்பை ஏற்படுத்திய நிலையில்,  காவல்துறை பச்சோந்திபோல செயல்படுவதாக நீதிபதி கடுமையாக விமர்சனம் செய்தார். தொடர்ந்து, அரசை விமர்சிப்பவர்களை கைது செய்வதிலும், எதிர்க்கட்சியினரை கைது செய்வதிலும், தேவையின்றி பலர் மீது குண்டாஸ் போடப்படுவதையும் கடுமையாக நீதிமன்றங்கள் விமர்சனம் செய்து வருகிறது. அதுபோல கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு உள்பட சில வழக்குகளில் காவல்துறையினரின் நடவடிக்கை மீது அதிருப்தி கொண்ட நீதிமன்றம்   சிபிஐ விசாரணைக்கு மாற்றி உள்ளது.

இநத் நிலையில்,  முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீதான மோசடி வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்கும்படி விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி மூலம், ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி, விருதுநகரைச் சேர்ந்த அதிமுக முன்னாள் பிரமுகர் விஜய நல்லதம்பி என்பவர், சாத்தூரைச் சேர்ந்த ரவீந்திரன் என்பவரிடம் 30 லட்சம் ரூபாய் பெற்றுள்ளார். உறுதியளித்தபடி வேலை வாங்கிக் கொடுக்காததால் ரவீந்திரன் போலீசில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, விஜய நல்லதம்பி உள்ளிட்டோருக்கு எதிராக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சிக்கு வந்ததும்,   கடந்த 2021ஆம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ள வழக்கில், விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரி ரவீந்திரன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ராஜேந்திர பாலாஜி முன்னாள் அமைச்சர் என்பதால் அவரது அரசியல் செல்வாக்கு காரணமாக வழக்கில் இன்னும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், வழக்கில் விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. உத்தரவு அமல்படுத்தியது குறித்து அறிக்கை தாக்கல் செய்வதற்காக இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன் று விசாரணைக்கு வந்தது. அப்போது, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக வழக்கு தொடர அரசின் அனுமதி பெறும் நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதி, உயர் நீதிமன்ற உத்தரவு அமல்படுத்தப்படாததால் அந்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், தமிழக போலீசாருக்கு நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த நேரமில்லாததால், இந்த வழக்கின் விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைக்கும்படியும் உத்தரவிட்டுள்ளார்.