சென்னை,

மிழக முன்னாள்  டி.ஜி.பி. ஜாபர்சேட்டுக்கு பணி வழங்கவேண்டும் என்று சென்னை உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக உளவுத்துறை முன்னாள் டிஜிபியாக இருந்தவர் ஜாபர் சேட். தி.மு.க. ஆட்சியின் போது, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திடம் இருந்து சட்ட விரோதமாக அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் நில ஒதுக்கீடு செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

இதில் ஊழல் நடைபெற்றுள்ளது என்று, அதிமுக ஆட்சி வந்தவுடன் தமிழக லஞ்ச ஒழிப்புதுறை அவர் மீது கடந்த 2011-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது. அதைத்தொடர்ந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

அதை எதிர்த்து ஜாபர் சேட் சென்னை  மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில்  வழக்கு தொடர்ந்தார் மனுவை விசாரித்த தீர்ப்பாயம்,  தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்து பணி வழங்க உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதி கே.கே.சசிதரன், வி.பார்த்திபன் ஆகியோர் விசாரித்து வந்தது.

இன்று விசாரணைக்கு வந்தபோது,  தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.  மேலும், ஜாபர்சேட்டுக்கு வருகிற 18-ந்தேதிக்குள் தகுந்த பணியினை ஒதுக்கும் படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்