மருத்துவர்களின் அலட்சியத்தால் உடல்நலம் பாதிக்கப்பட்ட இளைஞருக்கு அரசு வேலை வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலம் மாவட்டம் மேட்டூரைச் சேர்ந்த சசிகலா என்பவர் வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்த தனது 15 வயது மகனை 2016ம் ஆண்டு அக்டோபர் 27ம் தேதி மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

குடல் அழற்சி (அப்பண்டிஸ்) நோய் காரணமாக வயிற்றுவலி ஏற்பட்டுள்ளதாகவும் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியதை அடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு தீவிர மருத்துவ கண்காணிப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு ஆசன வாய் வழியாக ரத்தக் கசிவு ஏற்பட்டது.

இதுகுறித்து மருத்துவர்களிடம் தெரிவித்தும் அவர்கள் அதுபற்றி பெரிதாக அக்கறை எடுத்துக்கொண்டதாக தெரியவில்லை. பின்னர் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அனுப்பிய நிலையில் ரத்தக் கசிவு நிற்காததை அடுத்து ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து தனியார் மருத்துவமனை என பல்வேறு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்ற நிலையில் அறுவை சிகிச்சை செய்த இடத்தில் அவரது வயிற்றில் சீழ் வைத்துள்ளதாக கூறியுள்ளனர்.

இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான சசிகலா தற்போது 22 வயதாகவும் தனது மகனுக்கு மருத்துவர்களின் அலட்சியத்தால் உடல்நலம் பாதிக்கப்பட்டு அடிக்கடி மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த் பாதிக்கப்பட்ட இளைஞருக்கு அரசு வேலை வழங்கவும் ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.