சென்னை: உயர்நீதிமன்றம் உத்தரவு எதிரொலியாக சதுரகிரி மலையில் இன்றுமுதல் பக்தர்கள் தினசரி சென்றுவர அனுமதி வழங்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது.
சதுரகிரிமலையில் வீற்றிருக்கும் சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு இதுவரை குறிப்பிட்ட அமாவாசை, பவுர்ணமி மற்றும் சில முக்கிய நாட்களில் மட்டுமே பக்தர்கள் சென்று வர அனுமதி வழங்கப்பட்டு வந்தது. இதற்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை தடை விதித்து, தினசரி சென்றுவர பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டது. இதையடுத்து இன்று முதல் பக்தர்கள் நாள்தோறும் சதுரிகிரி மலை சென்று சுவாமி தரிசனம் செய்து வராம் என மாவட்ட நிர்வாகம், மற்றும் வனத்துறை அறிவித்துஉள்ளது.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர-சந்தன மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. சித்தர்கள் வாழும் பூமியாக அறியப்படும் இந்த மலையில் உள்ள சிவனை வழிபட்டால் நன்மைகள் நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. 4 பக்கமும் மலைகள் சூழ்ந்துள்ள இந்த கோவில் பகுதி அடர்ந்த வனப்பகுதியை கொண்டது. இதன் காரணமாக, பக்தர்களின் பாதுகாப்பை கருதி, ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம் நாட்களில் பக்தர்கள் மலையேறிச் சென்று தரிசனம் செய்ய வனத்துறை அனுமதி வழங்கி வருகிறது.
ஆனால், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லாமல் இருந்தது. இதனால் விசேஷ நாட்கள் மட்டுமின்றி அனைத்து நாட்களிலும் பக்தர்கள் சென்று வந்தனர்.
ஆனால், இடையில் ஏற்பட்ட கடும் மழை அதனால் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 10-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பலியாகினர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, பக்தர்கள் சதுரகிரிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. பின்னர் பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று பல்வேறு கட்டுப்பாடுகளுடன் குறிப்பிட்ட நாட்களில் மட்டும் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இதை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்றம் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. பிரசித்தி பெற்ற சதுரகிரி கோவிலுக்கு பக்தர்களை தினமும் அனுமதிக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் பக்தர்களை தினமும் தரிசனம்செய்ய அனுமதிக்க வேண்டும் என உத்தர விட்டதோடு சில வழிகாட்டுதல்களையும் வழங்கினர்.
மதுரை உயர்நீதிமனற் உத்தரவை நடை முறைப்படுத்துவது குறித்து விருதுநகர் மாவட்ட அதிகாரிகள், வனத்துறை யினர் தீவிர ஆலோசனை நடத்தினர். இறுதியில் இன்று (3-ந் தேதி) முதல் நாள்தோறும் பக்தர்களை சதுரகிரிக்கு அனுமதிப்பது என முடிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட வருவாய் அதிகாரி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவுப்படி சதுரகிரிக்கு தினமும் செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே சோதனை சாவடி வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்படு வார்கள். மாலை 4 மணிக்குள் லையில் இறங்கி திரும்பி வந்துவிட வேண்டும்.
உரிய அனுமதியின்றி எவரேனும் மலையில் தங்கி இருந்தால் கடுமு நடவடிக்கை எடுக்கப்படும்.
சதுரகிரிக்கு அனு மதிக்கப்பட்ட வழியில் மட்டுமே செல்ல வேண்டும். வேறு எந்த பகுதியிலும் நுழையக்கூடாது.
மதுரை ஐகோர்ட்டு வழிகாட்டுதல்களை பின்பற்றி பக்தர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.
இதற்கிடையில் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவுப்பட்டி இன்று முதல் சதுரகிரிக்கு செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். காலை 6 மணிக்கு தாணிப்பாறை அடிவார கேட் திறக்கப்பட்டது. ஆனால், மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவு குறித்து இன்னும் பக்தர்களிடம் போய் சேராத நிலையில், இன்று பக்தர்கள் யாரும் வரவில்லை என்று கூறப்படுகிறது.