மதுரை: தமிழக அரசின் மின்கட்டம் உயர்த்தும் முடிவுக்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை தடை விதித்துள்ளது.

தமிழ்நாட்டில் மின்கட்டண உயர்வு குறித்து தமிழகஅரசு அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு பொதுமக்கள், தொழில் நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், பொதுமக்கள் கருத்துக்கேட்டு முடிவு செய்யப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார். அதுபோல சென்னை உள்பட பல இடங்களில் நடத்தப்பட்ட கருத்துக்கேட்பு கூட்டத்தில், தமிழகஅரசின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது ஆனால், அதை ஏற்க மறுத்த அமைச்சர், மின் கட்டண உயர்வு திட்டமிட்டடி உயர்த்தப்படும் என அறிவித்தார்.

இந்த நிலையில், மின் கட்டண உயர்வுக்கு தடை விதிக்கக்கோரி தமிழ்நாடு நூற்பாலைகள் சங்க தலைமை ஆலோசகர் கே.வெங்கடாசலம் உள்பட  சிலர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர். அவர்களது மனுவில், தமிழ்நாடு மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையத்தில் தலைவர் மற்றும் 2 உறுப்பினர்கள் இருக்க வேண்டும். தற்போது தலைவர் மற்றும் தொழில்நுட்ப உறுப்பினர் மட்டும் உள்ளனர். சட்டத்துறை சார்ந்த உறுப்பினர் நியமிக்கப்படவில்லை. இந்த நிலையில் தமிழகத்தின் மின் கட்டணத்தை உயர்த்த அனுமதி கோரி மின்வாரியம் சார்பில் ஒழுங்குமுறை ஆணையத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை ஒழுங்குமுறை ஆணையம் விசாரணைக்கு ஏற்று, பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டங்களை நடத்தி வருகிறது.

தலைவர் மற்றும் ஒரு உறுப்பினர் மட்டும் இருக்கும்போது, ஒழுங்குமுறை ஆணையம் கூடியது சட்டவிரோதம். எனவே, மின்வாரிய ஒழுங்கு முறை ஆணையத்தில் சட்டத்துறை சார்ந்த உறுப்பினரை நியமிக்கும் வரை கட்டண உயர்வு தொடர்பாக முடிவு எடுக்கவும், கருத்து கேட்பு கூட்டம் நடத்தவும் தடை விதிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளையில்,  நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு மற்றும் மனுதாரர்களின் வாதங்களை கேட்ட நீதிபதி, தமிழகஅரசின் மின் கட்டணத்தை உயர்த்தும் முடிவுக்கு இடைக்கால  தடை விதிப்பதாக அறிவித்தார்.

மனுதாரர்கள் சார்பில் இந்த வழக்கில் ஆஜரான வக்கீல்கள், சட்டத்துறையில் நிபுணத்துவம் பெற்றவர் இல்லாமல் மின் கட்டண உயர்வு நடவடிக்கைகளை மேற்கொள்வது அரசியலமைப்பு சட்டத்திற்கும், உச்சநீதிமன்ற உத்தரவுகளுக்கும் எதிரானது என தெரிவித்தனர். மின்வாரிய ஒழுங்கு முறை ஆணையத்தின் தொழில்நுட்ப உறுப்பினரை தேர்வு செய்து நியமித்த அதே நேரத்தில் சட்டத்துறை சார்ந்த உறுப்பினரையும் அந்த பதவியில் நியமித்து இருக்கலாம் என்று வாதிட்டுள்ளனர்.

ஆனால் அரசு தரப்பில், பல ஆண்டுகளாக மின் கட்டண உயர்வுக்கான நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது எடுத்துள்ள நடவடிக்கையை தாமதப்படுத்துவது ஆபத்தில் முடியும். எனவே இந்த மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்கள், உத்தரவுகளை பின்பற்றுவது உயர்நீதிமன்றங்களின் கடமையாகும். அந்த வகையில் ஒரு ஆணையத்தில் சட்ட உறுப்பினர் இருப்பது கட்டாயம் என உச்சநீதிமன்றம் தெரிவிக்கிறது. அப்படி இருக்கும்போது, அந்த பதவிக்குரிய நபரை நியமிக்காதது நியாயம் இல்லை.

மேற்கண்ட 2 பதவிகளுக்கான நபர்களை ஒரே நேரத்தில் நியமிப்பதற்கு மாநில அரசுக்கு எந்த தடையும் இல்லை. ஆனால் அதை செய்யவில்லை. இந்த காரணத்திற்காகவே, தமிழக மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்ட உறுப்பினர் நியமிக்கப்படும் வரை, மேற்கூறிய கட்டண உயர்வு அனுமதி கோரும் மனுக்கள் மீதான இறுதி உத்தரவை பிறப்பிக்க தடை விதிக்கிறேன்.

மின் கட்டண உயர்வு தொடர்பான தற்போதைய நடவடிக்கைகளை தொடரலாம். ஆனால் சட்ட உறுப்பினரை நியமித்த உடனேயே, இந்த தடை உத்தரவு காலாவதியாகி விடும். மனுதாரர்கள் தங்களது கோரிக்கையை உரிய ஆணையத்தில் தெரிவிக்க ஒருவாரம் அவகாசம் அளிக்கப்படுகிறது. இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது.

இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.