மதுரை:
துரை சித்த மருத்துவர் கண்டுபிடித்த சித்த மருந்தை ஆய்வு செய்யும்படி தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

கொரோனாவுக்காக தான் கண்டுபிடித்த இம்ப்ரோ மருந்தை பரிசோதித்து முடிவுகளை அறிவிக்கக் கோரி மதுரை சித்த மருத்துவர் சுப்பிரமணியன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், தமிழக அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

கொரோனா தொற்றுக்கு எந்த அடிப்படையில் கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் பரிந்துரைக்கப்படுகிறது? அங்கீகரிக்கப்பட்ட சித்த மருத்துவர்கள் கண்டுபிடித்த மருந்தை இதுவரை ஆய்வு செய்யாதது ஏன்? கபசுரக் குடிநீர் மற்றும் நிலவேம்பு கசாயத்தை, எந்த பரிசோதனையின் அடிப்படையில் வழங்குகிறீர்கள்? கேள்வி எழுப்பிய நிதிபதிகள், இந்த வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தனர்.

அதன்படி இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு மற்றும் மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழக பரிந்துரையின் பேரிலேயே கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் மக்களுக்கு தரப்படுகிறது என்றும், ஆர்சனிக் ஆல்பம் 30 என்ற ஹோமியோபதி மருந்தும் பரிந்துரை அடிப்படையிலேயே வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. சென்னை அரும்பாக்கத்தில் ரூ.12 கோடி செலவில் ஆராய்ச்சி மையம் அமைப்பதாகவும் தமிழக அரசு தெரிவித்தது.

இதையடுத்து சித்த மருத்துவர் சுப்பிரமணியன் கண்டுபிடித்த இம்ப்ரோ மருந்தை ஆய்வு செய்யும்படி தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதற்காக மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழுவை அமைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

சித்தமருத்துவர் சுப்பிரமணியன், கொரோனாவுக்கு கண்டுபிடித்துள்ள சித்த மருந்தை ஹோமியோபதி இயக்குநரிடம் அளிக்க வேண்டும். ஜூன் 26ம் தேதி ஆவணங்களுடன் நேரில் சென்று ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். மருந்தை நிபுணர் குழு ஆய்வு செய்து ஜூன் 30 தேதிக்குள் அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.