உதகமண்டலம் (ஊட்டி) மற்றும் கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகையை கட்டுப்படுத்த இந்த ஆண்டு இ-பாஸ் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

இதனால் சுற்றுலா பயணிகளின் வருகை வெகுவாகக் குறைந்ததுடன் மலைப்பாதையில் போக்குவரத்தும் கட்டுப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து ஊட்டி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சோலைக்காடுகளை மீட்டெடுக்கும் விதமாக சோலைக்காடுகளை ஆக்கிரமித்துள்ள வெளிநாட்டு மற்றும் பிற இன மரம் செடி கொடிகளை அகற்ற சென்னை உய்ரநீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இதுதொடர்பாக, உயர் நீதிமன்ற கட்டிடத்தில் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம், பொதுப்பணி, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் ஆகிய துறைகளின் செயலாளர்கள் மற்றும் முதன்மை தலைமை வன பாதுகாவலர் ஆகியோருடன் நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் நேற்று ஆலோசனை நடத்தினர்.

இதில், மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சோலைக்காடுகளில் பூர்வீக தாவரங்களின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், ஆக்கிரமிப்பு இனங்களை 100% ஒழிக்க வலியுறுத்தினர்.

TNPIPER (தமிழ்நாடு ஆக்கிரமிப்பு, வேற்று தாவர இனங்கள் மற்றும் சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு கொள்கை) என்ற தலைப்பில் தனிக் கொள்கையை நாட்டிலேயே முதல் மாநிலமாக தமிழகம் வகுத்துள்ளது இருந்தபோதும் மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து லாந்தனா காமாரா மற்றும் சென்னா ஸ்பெக்டபிலிஸ் போன்ற ஆக்கிரமிப்பு இனங்களை அகற்றுவதில் அரசு தீவிரம் காட்டவில்லை என்று நீதிபதிகள் சுட்டிக்காட்டினார்.

3 லட்சம் ஹெக்டேர் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் 2,000 ஹெக்டேர் மட்டுமே இதுவரை தூய்மை செய்யப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட நிலப்பரப்பில் இது 1% கூட இல்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

வன விலங்குகளின் நடமாட்டம், மழைப்பொழிவு போன்ற பிரச்னைகளை, ஆக்கிரமிப்பு இனங்களை அகற்றுவதில் தாமதம் ஏற்பட காரணம் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.

மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக தமிழகம் விளங்கும் வகையில் தனியார் நிறுவனங்களும் தங்கள் கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு (CSR) செயல்பாடுகள் மூலம் பணியில் ஈடுபடுத்த தரமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் சீமை கருவேலத்தை (புரோசோபிஸ் ஜூலிஃப்ளோரா) ஒழிக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

மீண்டும் ஜூன் 28ம் தேதி இதுதொடர்பான கூட்டம் நடைபெறும் என்றும் அப்போது தாங்கள் எடுத்த நடவடிக்கை மற்றும் ஆக்கிரமிப்பு செடிகளை அகற்றுவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.