சென்னை:

ருத்துவ மேற்படிப்புக்கான மாணவர் சேர்க்கையில், கிராமப்புற பகுதிகளில் வேலை செய்யும் மருத்துவர்களுக்கு  ஊக்க மதிப்பெண் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

அரசு டாக்டர்கள் முதுகலை மருத்துவ படிப்பில் சேரும்போது 10 முதல் 30 சதவீதம் வரை ஊக்க மதிப்பெண்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த மதிப்பெண்கள், தொலைதூரம், மலைப்பகுதி மற்றும் கிராமப்பகுதிகளில் பணியாற்றும் மருத்துவர்கள் மட்டுமே பயன்பெறும் வகையில் தமிழக அரசு சார்பில் அரசாணை பிறப்பிக்கப்பட்டிருந்து.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அரசாணையை ரத்து செய்யக்கோரியும் மருத்துவர்கள் சிலர்,  சென்னை உயர்நீமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இவ்வழக்கு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசின் உதவி சொலிசிட்டர் ஜெனரல் கார்த்திகேயன் ஆஜராகி, ‘இந்த வழக்கில் ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பிக்கும் வரை மாணவர் சேர்க்கை நடத்தப்படாது என கூறியிருந்தார்.

இந்நிலையில், வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.  மருத்துவ மேற்படிப்புக்கான மாணவர் சேர்க்கை குறித்து தமிழக அரசு பிறப்பித்திருந்த அரசாணையை ரத்து செய்வதாக நீதிபதி அறிவித்தார்.

இதன் காரணமாக கிராமப்புற பகுதிகளில் பணியாற்றி வரும் மருத்துவர்கள் மேற்படிப்பு படிக்கும் நிலை பாதிப்புக்குள்ளாகி உள்ளது. வரும் காலங்களில் கிராமப்பகுதிகளிலோ, மலை பிரதேசங்களிலோ பணியாற்ற மருத்துவர்கள் முன்வர யோசிக்கும் நிலை உருவாகி உள்ளது.