சென்னை: தமிழகத்தை தண்ணீர் பஞ்சம் மிகவும் மோசமான முறையில் வாட்டிவரும் நிலையில், அச்சிக்கலைத் தீர்க்க அரசு தரப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்த விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு, தமிழக அரசிற்கு உத்தரவிட்டுள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

வரும் ஜுன் 17ம் தேதி இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும். சென்னையின் புறநகர் பகுதியில் தனியார் நிறுவனங்களால் தண்ணீர் சூறையாடப்படுவது மற்றும் தண்ணீர் வழிதடத்தில் கழிவுநீரை ஓடவிடுவது உள்ளிட்டவற்றுக்கு எதிரான வழக்குகளை உயர்நீதிமன்றம் விசாரித்தது. அப்போது, கழிவுநீர் மேலாண்மை தொடர்பான ஏற்பாடுகள் தொடர்பாகவும் அரசிடம் விபரங்கள் கேட்கப்பட்டது.

பருகுவதற்கு தூய குடிநீர் பெறுவதென்பது மக்களின் உரிமை என்று கூறிய நீதிமன்றம், கடல்நீரை குடிநீராக்குவது தொடர்பாக, கிழக்கு கடற்கரையோர சாலையில் மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டங்கள் குறித்தும் விபரங்கள் கேட்டுள்ளது.

மேலும், சென்னையைச் சுற்றிய ஏரிகள் மற்றும் நீர்நிலைகள் அனைத்தும் வறண்டுவிட்டதால், தண்ணீர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான வேறு மாற்று ஏற்பாடுகள் என்ன என்பது குறித்தும் அரசு பதிலளிக்க வேண்டுமாய் கேட்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு வறட்சி நிவாரணமாக மத்திய அரசிடம் ரூ.5000 கோடி உதவித்தொகை கேட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.