சென்னை: தமிழக அரசு ரேசன் அட்டைதாரர்களுக்கு வழங்கும் பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்க உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கின் விசாரணை, அரசு வழக்கறிஞரின் கோரிக்கையை ஏற்று ஜனவரி 2ந்தேதிக்கு ( திங்கட்கிழமை) உயர்நீதிமன்றம் ஒத்திவைத்து.
தமிழகஅரசு இந்த ஆண்டு பொங்கல் தொகுப்பாக வெறும் அரிசி மற்றும் சர்க்கரை உடன் ரூ.1000 ரொக்கம் வழங்குவதாக அறிவித்து உள்ளது. கடந்த ஆண்டு கரும்பு உள்பட 21 பொருட்களுடன் ரொக்கம் வழங்கிய நிலையில், இந்த ஆண்டு பொருட்களை குறைத்துள்ளது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மேலும், விவசாயிகள் அரசு கரும்பு கொள்முதல் செய்து ரேசன் அட்டைதாரர்களுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில்,.
பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு சேர்த்து வழங்க உத்தரவிட கோரி கடலூரை சேர்ந்த விவசாயி ராதாகிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அவரது மனுவில், அரசு கொள்முதல் செய்யாததால் குறைந்த விலைக்கு கரும்புகளை விற்க வேண்டிய சூழல் வரும் என்றும், இதனால், கரும்பு விவசாயிகளின் குடும்பத்தினர் திருப்தியாக பொங்கல் பண்டிகையை கொண்டாட முடியாத நிலை உள்ளதாகவும் எனவே, பொங்கலையும், கரும்பையும் பிரிக்க முடியாது என்பதால் பொங்கல் தொகுப்புடன் கரும்பு வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. விசாரணையின்போது, வழக்கை திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்க வேண்டும் என அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் விடுத்த கோரிக்கையை ஏற்று ஒத்திவைக்கப்பட்டது.