சென்னை: மாநகராட்சியில் வட்டியில்லாமல் சொத்து வரி செலுத்த ஜன.15 வரை அவகாசம் நீடித்து, சென்னை மாமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியின் இந்த மாதத்திற்கான மாமன்ற கூட்டம் இன்று ரிப்பன் மாளிகையில் உள்ள மாமன்றக் கூட்டரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மேயர் பிரியா தலைமை தாங்கினார். மேலும், துணை மேயர் மகேஷ்குமார், ஆணையாளர் ககன்தீப்சிங் பேடி மற்றும் கவுன்சிலர்கள், நிலைக்குழுத் தலைவர்கள், மண்டலக் குழுத் தலைவர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இன்றைய கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில் முக்கியமானதாக,  சென்னை மாநகராட்சியில் தனி வட்டி இல்லாமல் சொத்து வரி செலுத்துவதற்கான அவகாசத்தை ஜனவரி 15-ஆம் தேதி வரை நீடிக்க தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

மேலும்,  பணிகள் துறைக்கு, நகர திட்டமிடல் துறை என பெயர் மாற்றவும், கட்டணங்களை மாற்றி அமைக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. மேலும், மீனம்பாக்கம், சோழிங்கநல்லூரில் புதிய நாய் இனக் கட்டுப்பாடு மையம் அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.