சென்னை:
வெப்ப சலனம் காரணமாக கன்னியாகுமரி, நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கிழக்கு-மத்திய வங்க கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இது மேலும் வலுப்பெற்று நாளை புயலாக மாறும். புதிதாக உருவாகும் புயலுக்கு யாஸ் என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த யாஸ் புயல் 25ம் தேதி அதிதீவிர புயலாக மாறி, வடக்கு-வடமேற்கு திசையில் நகரும் என்றும், வடக்கு ஒடிசா-வங்காளதேசம் இடையே 26ம் தேதி மாலையில் கரை கடக்கலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் காரணமாக கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும். எனவே, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

இந்த புயல் கரையை கடக்கும் நேரத்தில் புயல் மூலம் வீசும் காற்றின் வேகம் 120 கிமீ வரை இருக்கும். அல்லது அதைவிட குறைவாக இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக ஏற்படும் சேதத்தை விட, புயல் மூலம் ஏற்படும் கடல் அலைகள்தான் அதிக சேதத்தை ஏற்படுத்தும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் வெப்ப சலனம் காரணமாக கன்னியாகுமரி, நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். மேலும் சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.