டெல்லி :

354 கிலோ எடை கொண்ட சுமார் 2500 கோடி ரூபாய் மதிப்புடைய ஹெராயின் போதைப் பொருளை ஹரியானாவின் பரிதாபாத் நகரில் போதைப் பொருள் தடுப்பு போலீசார் கைப்பற்றினர்.

இது தொடர்பாக நான்கு பேரை கைது செய்துள்ள போலீசார், மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்புடைய இவர்கள் ஆப்கானிஸ்தான், ஐரோப்பா மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வருகின்றனர்.

ஈரான் துறைமுகத்தில் இருந்து அனுப்பப்பட்ட இந்த போதை மருந்து பார்சல்கள், மும்பை துறைமுகம் வழியாக மத்திய பிரதேச மாநிலத்தில் இயங்கி வரும் கும்பலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அங்கிருந்து இந்தியாவின் டெல்லி, பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட இருந்த இந்த போதைப் பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் நவ்பரீத் சிங் போர்ச்சுகல் நாட்டில் இருந்து செயல்படுவதாகவும், இந்த கடத்தல் கும்பலுக்கு பாகிஸ்தானில் இருந்தும் பணம் வருவதாக டெல்லி காவல்துறை சிறப்பு பிரிவு ஆணையாளர் நீரஜ் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

இந்த போதைப் பொருளுடன் 100 கிலோ எடையுள்ள ரசாயனமும் கைப்பற்றப்பட்டதாக கூறியுள்ளனர், பிடிபட்ட போதைப் பொருளின் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் ரூ. 2500 கோடி என்பதும், இதுபோல் மிக அதிக மதிப்புள்ள போதைப் பொருள் ஒரே நேரத்தில் கைப்பற்றப்படுவதே இதுவே முதல் முறை என்று சொல்லப்படுகிறது.

கடந்த வாரம் 2000 கோடி ரூபாய் மதிப்புள்ள 283 கிலோ போதைப் பொருளை வருவாய்ப் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.