பெங்களூரு: நிலவை ஆராய அனுப்பப்பட்டுள்ள சந்திரயான்-3 விண்கலம் நிலவில் கால்பதிக்க உள்ள நிலையில், அதில் இருந்து பிரிந்து நிலவை சுற்றி வரம் லேண்டர், நிலவின் புகைப்படங்களை எடுத்து அனுப்பி உள்ளது. அந்த புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்காக ஜூலை 14-ந் தேதி விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான்3 விண்கலம் நிலவை சுற்றி வருகிறது. வரும் 24ந்தேதி நிலவில் தரையிறக்க இஸ்ரோ முடிவு செய்துள்ளது. இந்த விண்கலம் ஏவப்பட்டதும்,முதற்கட்டமாக , புவி சுற்றுவட்டப் பாதையில் பூமியை சுற்றி வந்ததது. ‘ஆகஸ்டு 1-ந் தேதி அதை, புவியீர்ப்பு விசையில் இருந்து விலக்கி நிலவை நோக்கிய பயணத்தை தொடங்க இஸ்ரோ நடவடிக்கை எடுத்தது. அது வெற்றிகரமாக நடந்த நிலையில், 5 நாள் பயணத்துக்குப் பிறகு ஆகஸ்டு 5-ந் தேதி நிலவின் சுற்றுவட்டப்பாதைக்குள் ‘சந்திரயான்-3’ நுழைந்தது. இதையடுத்து, அதன் சுற்று வட்டப்பாதையின் உயரம் படிப்படியாக 4 முறை குறைக்கப்பட்டு நிலவை நெருங்கி சுற்றி வருகிறது.
சந்திரயான்3 விண்கலத்தில் இருந்து, அதாவது விண்கலம் நிலவின் தரைப்பகுதியில் இருந்து 153 கி.மீ. உயரத்தில் இருந்தபோது, அதில் உள்ள உந்துவிசை கலனில் இருந்து ‘விக்ரம் லேண்டர்’ கருவி தனியாக பிரிக்கப்பட்டது. இந்த நிகழ்வு வெற்றிகரமாக நடைபெற்ற நிலையில், உந்துவிசை கலன், லேண்டர் ஆகியவை தனித்தனியாக நிலவின் சுற்றுவட்டப் பாதையில் சுற்றி வருகிறது. பிரிக்கப்பட்ட உந்துவிசை கலன் தனியாக தொடர்ந்து நிலவை சுற்றியபடி சில மாதங்களுக்கு ஆய்வுப்பணியை மேற்கொள்ளும்.
இதையடுத்து பிரிக்கப்பட்ட லேண்டரை தரையிறக்குவதற்கான பணிகளை இஸ்ரோடு மிகுந்த கவனத்துடன் செய்துவருகிறது. லேண்டர் தரையிறங்கும் வகையில், அதற்கான சுற்றுவட்டப்பாதையின் உயரத்தை குறைத்து வருகிறது. தற்போது நீள்வட்ட பாதையில் சுற்றி வரும் லேண்டர், குறைந்தபட்சம் 25 கி.மீ. தூரத்திலும், அதிகபட்சம் 134 கி.மீ. தொலைவிலும் சுற்றிக் கொண்டிருக்கிறது. அடுத்தக்கட்டமாக லேண்டரை நிலவில் தரையிறக்குவதற்கான பணிகளை இஸ்ரோ மேற்கொண்டு வருகிறது.
ஏற்கனவே ஆகஸ்டு 23-ந் தேதி மாலை 5.45 மணிக்கு லேண்டர் தரையிறக்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தரையிறங்கும் நேரம் மாற்றி இருப்பதாக தெரிவித்துள்ள இஸ்ரோ, 23ந்தேதி மாலை 5.45 மணிக்கு பதிலாக 19 நிமிடங்கள் தாமதமாக, மாலை 6.04 மணிக்கு தரையிறக்கப்பட இருக்கிறது எதிர்விசை நடைமுறையை பயன்படுத்தி லேண்டர் கருவியின் வேகத்தை படிப்படியாக குறைத்து வருவதாகவும், இறுதியாக பூஜ்ஜிய நிலைக்கு கொண்டுவந்து, மெதுவாக நிலவில் தரையிறக்கப்படும் என தெரிவித்து உள்ளது.
லேண்டர் தரையிறங்கி ஒருசில மணி நேரத்தில், அங்கு ஏற்படும் புழுதி அடங்கியதும், அதனுள் உள்ள ரோவர் வாகனம் வெளியேறும் வகையில், லேண்டரின் ஒரு பகுதி திறந்து, ரோவர் வாகனம் தரையிறங்கும் வகையில், சாய்வுதளம் அமைத்துக்கொடுக்கும். அதன் வழியாக ரோவர் நிலவில் இறங்கி தனது ஆய்வுப்பணிகளை மேற்கொள்ள இருக்கிறது.
இந்த நிலையில், ந்திரயான் 3 லேண்டர் எடுத்த நிலவின் புதிய புகைப்படத்தை இஸ்ரோ இன்று வெளியிட்டுள்ளது.
லேண்டர் கருவி நிலவில் தரையிறங்கும்போது அங்குள்ள சூழல், இடர்பாடுகளை கண்டறிய கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தரையிறங்குவதற்கு பாதுகாப்பான இடங்களை லேண்டர் படம் பிடித்து அனுப்பி உள்ளது. நிலவில் உள்ள சூழல் மற்றும் இடர்பாடுகளை கண்டறிய பொருத்தப்பட்ட கேமரா கடந்த 19ந்தேதி நிலவை புகைப்படம் எடுத்த நிலையில் இன்று மீண்டும் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. எல்.எச்.டி.ஏ.சி. அதிநவீன கேமரா மூலம் எடுக்கப்பட்ட 4 புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.