சென்னை

சென்னையில் நடைபெற உள்ள ராணுவ தளவாட பொருட்காட்சி அமைப்பில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் கூண்டு போன்ற இடங்களில் தங்க வைக்கப்பட்டு கடும் துயருக்கு உள்ளாகி வருகின்றனர்.

சென்னைக்கு 20 கிமீ தூரத்தில் உள்ள திருவிடந்தை அருகே ராணுவ தளவாட கண்காட்சி நடைபெற உள்ளது.   வரும் 11 ஆம் தேதி முதல் நான்கு நாட்களுக்கு நடைபெற உள்ள இந்த கண்காட்சிக்கான அரங்குகளை அமைக்க ஒரு தனியார் நிறுவனம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.   அரங்குகளை அமைக்க இந்த நிறுவனத்தின் தொழிலாளர்கள் இரவும் பகலுமாகப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அந்த தொழிலாளர்கள் தங்க அந்த நிறுவனம் அருகிலேயே இடம் அமைத்துள்ளது.    சிறிய சிறிய கூண்டுகள் போன்ற இடங்களில் இந்த தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.   சுற்றிலும் இரும்பு தகடுகளால் அமைக்கப்பட்டுள்ள இந்த தங்குமிடத்தின் மேற்கூறையாகவும் இரும்புத் தகடே அமைக்கப்பட்டுள்ளது.

சுமார் 3 அடிக்கு 4 அடி பரப்புள்ள ஒவ்வொரு கூண்டுக்குள்ளும் சுமார் மூன்று முதல் நான்கு தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.   அவர்களுக்கு ரெயில்வே பெர்த் போன்ற அமைப்பில் படுக்கைகள் அங்கு அமைக்கப்பட்டுள்ளன.      அந்த தொழிலாளர்களால் அந்த படுக்கையில் எழுந்து உட்காரும் அளவுக்கு கூட அங்கு இடம் இல்லாமல் உள்ளது.  தற்போது கடும் கோடைக்காலமாக உள்ளதால் அங்கு தங்கி உள்ள தொழிலாளர்கள் வியர்வை மழையில் நனைந்த படி உள்ளனர்.

இது குறித்து அந்த தொழிலாளர்கள், “ஒரு சில நாட்கள் மட்டுமே இங்கு தங்க வேண்டி இருக்கும் என முதலில் கூறப்பட்டது.   ஆனால் இப்போது அதுவே நிரந்தரமாகி விட்டது.   இங்கு கடும் வெப்பமும் கொசுத் தொல்லையும் உள்ளது.   திறந்த வெளியில் குளிக்க வேண்டி உள்ளது.   உணவும் மிகவும் மோசமாக உள்ளது.    மிகக் குறைந்த கழிவறகளே உள்ளன” என தங்கள் அவல நிலையை தெரிவித்தனர்.

ராணுவ அதிகாரி தினேஷ் சந்திர யாதவ், “இப்போது அமைக்கப்பட்டுள்ள இந்த தங்குமிடங்கள் மதிய உணவு அருந்தவும்,  உணவுக்குப் பின் சிறு ஓய்வு எடுக்கவுமே அமைக்கப்பட்டுள்ளன.    இந்த தொழிலாளர்கள் இரவில் அருகில் உள்ள கல்யாண மண்டபத்தில் தங்க வைக்கப்படுகின்றனர்.   ஒரு சிலர் கோவளத்தில் உள்ள விடுதிகளில் தங்க வைக்க்கப் பட்டுள்ளனர்.

மேலும் இந்த தொழிலாளர்கள் ஒப்பந்த நிறுவனத்தில் நிரந்தரப் பணியில் உள்ளவர்கள்.    அவர்களுக்கு இட வசதி அளிக்க வேண்டியது அந்த நிறுவனத்தின் பொறுப்பு ஆகும்.    இந்த நிறுவனத்தைப் போல மொத்தம் 670 நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளது.   அந்தந்த நிறுவனங்கள் அவரவர் தொழிலாளர்களை கவனிக்க வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.