ராஞ்சி
ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் அமலாக்கத்துறை காவல் மேலும் 3 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ்-ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல்வராக ஹேமந்த் சோரன் செயல்பட்டு வந்தார். நிலமோசடி மூலம் கோடிக்கணக்கான பணத்தைச் சட்டவிரோதமாகப் பரிமாற்றம் செய்ததாகவும், நிலக்கரி சுரங்க முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் ஹேமந்த் சோரன் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது.
கட்ந்த மாதம் 31 ஆம் தேதி இந்த வழக்கு தொடர்பாக ஹேமந்த் சோரனிடம் சுமார் 7 மணி நேரம் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள், அவரைக் கைது செய்தனர். ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறை கைது செய்வதற்கு சில மணிநேரத்திற்கு முன்பு முதல்-வர் பதவியை ராஜினாமா செய்தார். புதிய முதல்வராக சம்பாய் சோரன் பதவியேற்றார்.
ஹேமந்த் சோரனை 5 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்து கடந்த 2-ந்தேதி ராஞ்சி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த 3 ஆம் தேதி அவரது அமலாக்கத்துறை காவல் முடிவடைந்த நிலையில், மீண்டும் ராஞ்சி சிறப்பு நீதிமன்றத்தில் ஹேமந்த் சோரன் முன்னிறுத்தப்பட்டார்.
அமலாக்கத்துறை தரப்பில் விசாரணை முடிவடையாததால் ஹேமந்த சோரனின் காவலை நீட்டிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்று, ஹேமந்த் சோரனின் அமலாக்கத்துறை காவலை மேலும் 5 நாட்களுக்கு நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இன்று அமலாக்கத்துறைக்கு எதிராக ஹேமந்த் சோரன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் 27-ம் தேதிக்கு ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. அதே வேளையில் ஹேமந்த் சோரனின் அமலாக்கத்துறை காவல் மேலும் 3 நாட்கள் நீட்டிக்கப்படுவதாக சிறப்பு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.