ராஞ்சி

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டால் அவர் மனைவியை முதல்வராக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  

ரூ. 600 கோடி நில மோசடி தொடர்பான வழக்கில் ஜார்க்கட் முதல்வர் ஹேமந்த் சோரன் மீதும் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இதுவரை இந்த வழக்கில் 14 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.  க்\டந்த 20 ஆம் தேதி இந்த வழக்கு தொடர்பாக ஹேமந்த் சோரனின் இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஜனவரி 27-ஆம் தேதி  முதல் 31-ஆம் தேதிக்குள் ஏதேனும் ஒரு நாளில் ஹேமந்த் சோரன் ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியது. இக்கடிதத்துக்கு சோரன் தரப்பில் எந்தவித அதிகாரப்பூர்வ பதிலும் அனுப்பப்படவில்லை என கூறப்படுகிறது.

கடந்த 29 ஆம் தேதி டில்லியில் உள்ள ஹேமந்த் சோரனின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் அமலாக்கத்துறையினர் மீண்டும் சோதனை செய்தனர். அப்போது அங்கு ஹேமந்த் சோரன் இல்லை . இந்த சோதனையில், அவரின் வீட்டில் இருந்து ரூ.36 லட்சம், அவரின் 2 பி.எம்.டபிள்யூ. காரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.

இன்று ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனிடம் பணமோசடி வழக்கு தொடர்பாக அமலாக்கத் துறை விசாரணை நடத்தத் திட்டமிட்டு உள்ளது. இன்று விசாரணை முகமையின் முன் அவர் ஆஜராக உள்ளார். அவரிடம் கேள்விகளைக் கேட்டு பதில்களைப் பெற்ற பின்னர், அவர் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

அவர் கைது செய்யப்பட்டால், அடுத்த முதல்வராக சோரனின் மனைவி கல்பனா சோரன் பதவியேற்கலாம் என ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி வட்டாரம் தெரிவிக்கின்றது.  ஹேமந்த் சோரன் ஆளும் கூட்டணியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுடன் நடந்த கூட்டத்தில் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார் என்றும் தகவல் தெரிவிக்கின்றது.

அரசைப் பாதுகாப்பதே முக்கியம் என்பதற்காக சட்டமன்ற உறுப்பினர்கள் அதற்கு ஒப்புக் கொண்டதாகவும் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.