சென்னை கிண்டியில் உள்ள சர்தார் படேல் சாலையின் ஒரு பகுதி சரிந்து பள்ளமானதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மத்திய கைலாஷ் சந்திப்பில் இன்று காலை ஏற்பட்ட இந்த திடீர் பள்ளத்தில் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வடிகால் வாரியத்துக்குச் சொந்தமான டேங்கர் லாரி சிக்கிக்கொண்டது.

 

ராஜீவ் காந்தி சாலையை நோக்கிச் சென்றுகொண்டிருந்த இந்த கழிவுநீர் டேங்கர் லாரியின் பின் சக்கரம் பள்ளத்தில் சிக்கியதை அடுத்து ஓ.எம்.ஆர். சாலைக்கு செல்ல முடியாமல் வாகனங்கள் திணறின.

மத்திய கைலாஷ் சந்திப்பில் இருந்து கிண்டி, கோட்டூர்புரம் செல்லும் வாகனங்கள் மற்றும் ஐ.டி. காரிடார் செல்லும் வாகனங்கள் அனைத்தும் வழக்கத்தை விட மெதுவாக ஊர்ந்து சென்றன இதனால் வாகன ஓட்டிகளும் போக்குவரத்துக் காவலர்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள்.

இந்த சாலையில் பலமுறை இதுபோன்ற பள்ளம் ஏற்படுவதை அடுத்து மாநில நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுக்கு இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது.