காரைக்கால்
காரைக்கால் பகுதியில் இரு தினங்கள் மதுக்கடைகள் மூட உள்ளதாகக் கிளம்பிய வதந்தியால் தமிழ்நாட்டில் இருந்து சென்ற கூட்டம் அலை மோதி உள்ளது.
கொரோனா பரவல் காரணமாக புதுச்சேரியில் மூடப்பட்டிருந்த மதுக்கடைகள் கடந்த 8 ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கப்பட்டன. தற்போது தமிழகத்தில் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. எனவே இரு மாநில எல்லைகளில் உள்ள மதுக்கடைகளில் தமிழ்நாட்டில் இருந்து பலரும் சென்றதால் ஏராளமான கூட்டம் கூடுகிறது.
இவ்வாறு இருக்க நீதிமன்ற உத்தரவின்படி காரைக்காலில் இரு தினங்களுக்கு மதுக்கடைகள் மூடப்பட உள்ளதாக ஒரு வதந்தி கிளம்பியது. அது சமூக வலைத்தளங்களில் பலராலும் பகிரப்பட்டது. இது பொய்த் தகவல் எனப் புதுச்சேரி கலால் துறை அறிவித்தது. ஆயினும் காரைக்காலில் துவாக்குடியில் உள்ள மதுக்கடையில் தமிழகத்தில் மயிலாடுதுறையின் இருந்து புதுப்பிரியர்கள் குவிந்தனர்.
இவர்கள் முகக் கவசம் அணியாமலும் சமூக இடைவெளியைப் பின்பற்றாமலும் முண்டி அடித்து மதுபானம் வாங்க முயன்றனர். இதனால் கொரோனா பரவலாம் என அச்சம் எழுந்தது. தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறையினர் முகக் கவசம் அணியாதோரை வெளியேற்றினர். அத்துடன் அனைவரும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் காவல்துறையினர் வற்புறுத்தி உள்ளனர்.
தமிழகத்தில் இருந்து மக்கள் வருவதை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.