கடலூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பலத்த காற்றுடன் பெய்த மழை காரணமாக, அந்த பகுதியில் உள்ள மின் கம்பி அறுந்து விழுந்ததில் வயதான தம்பதி உள்பட 3 பேர் பலியாகி உள்ளனர். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார். இது அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சிதம்பரம் அருகே உள்ள சி.சாத்தமங்கலம் கிராமத்தில் காற்றுடன் கூடிய கனமழையின் காரணமாக தேவாலயம் முன்பு உட்கார்ந்திருந்தவர்கள், மீது உயரழுத்த மின்கம்பி மீது மரம் விழுந்ததால், மின்கம்பி அறுந்து விழுந்ததில் அங்கிருந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் கடலூர் மாவட்டத்தில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. தற்போது வங்கக்கடலில் உருவாகி உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, கடலூர் மாவட்டத்தில் கனத்த மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், சூறாவளி காற்றுடன் பெய்த கனமழை காரணமாக, சிதம்பரம் அருகே சி.சாத்தமங்கலம் கிராமத்தில் அந்த வழியாக செல்லும் உயரழுத்த மின்கம்பி மீது மரம் விழுந்து மின்கம்பி அறுந்து விழுந்ததில், அருகே இருந்த வீட்டின் முன்பு இருந்த மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
அதாவது, .சாத்தமங்கலம் கிராமத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் அருந்ததியர் தெருவில் புளியமரம் ஒன்று மின்கம்பம் மீது விழுந்ததில், மின்கம்பம் மற்றும் மின்கம்பி அருகே இருந்து வீடுகள், தேவாலயத்தின் மீது மின் கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதில் வீட்டின் அருகே உள்ள தேவாவலயத்தின் வெளியே அமர்ந்திருந்த அந்தோணி மகள் மரியம்சூசை (70), மரியம் சூசை மனைவி பிளவுன்மேரி (60), ரோசாப்பூ மனைவி வனதாஸ்மேரி (70) ஆகியோர் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், ஏசிபிள்ளை மகன் கனகராஜ் (58) படுகாயமுற்றார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த காவல்துறையினர், இறந்தவர்கள் மூவரது உடலும் பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. காயமடைந்தவரை சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து தகவல் அறிந்த சேத்தியாத்தோப்பு டி.எஸ்.பி விஜிகுமார், வட்டாட்சியர் கீதா மற்றும் மின்வாரியத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
விசாரணையில், சென்னையில் வசித்து வரும் மரியம் சூசையும், பிளவுன்மேரியும் எஸ்.ஐ.ஆர் வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு விண்ணப்பம் வழங்க சொந்த ஊருக்கு வந்ததாகக் கூறப்படுகிறது. சொந்த ஊருக்கு வந்த அவர்கள் இருவரும் மின்சாரம் பாய்ந்து இறந்தது அப்பகுதியினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதுகுறித்து ஓரத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மின்சாரம் பாய்ந்து இறந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், படுகாயம் அடைந்தவருக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடலூர் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன் கோரிக்கை விடுத்துள்ளார்.