தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக, அவ்வப்போது மழை பெய்து வருகிறது. சேலம் மாவட்டத்திலும் அடிக்கடி மழை பெய்து வருகிறது. இதனால் ஏரி, குளங்கள் நிரம்பி வருகின்றன. கடந்த 2 நாட்களாக பரவலாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நேற்று முன்தினம் முதல் சேலம் மாநகர் உள்பட மாவட்டத்தின் பல பகுதிகளும் மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சத்திரம் பகுதியில் பெய்த மழையால் அம்மா உணவகம் வளாகத்தில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து தேங்கியது. இதனால் அம்மா உணவகம் மூடப்பட்டது.
சேலம் பழைய பேருந்து நிலையில், புதிய பஸ் நிலையம், சூரமங்கலம், பெரமனூர், அழகாபுரம், அஸ்தம்பட்டி, மணக்காடு, கிச்சிப்பாளையம், அன்னதானபட்டி, செவ்வாய்பேட்டை, கன்னங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்ததால், தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது.
சேலம் தமிழ்ச்சங்க சாலை, பெரமனூர் நாராயண பிள்ளை வீதி ஆகிய இடங்களில் தண்ணீர் அதிகமாக தேங்கியதால் பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்தனர்.
தொடர்ந்து பெய்த மழை காரணமாக, சேலத்தாம்பட்டி ஏரி நிரம்பி தண்ணீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. சூரமங்கலம் பகுதியில் பலரது வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது. சூரமங்கலத்தை அடுத்த புது ரோடு ரெயில் நகர் பகுதியில் நேற்று பலத்த மழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
மேலும், ஆத்தூர், கெங்கவல்லி, தேவூர் உள்பட பல்வேறு இடங்களில் கன மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து பெய்த மழை காரணமாக சேலம் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.