சென்னை: சென்னை மற்றும் அண்டை மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால், சென்னைக்கு குடிநீர் வழங்கும் எரிகளான பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஏரிகள் முழு கொள்ளவை நெருங்கி உள்ளதால், ஏரியில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டு உள்ளது. இதனால் ஆற்றின் கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் மழை கொட்டி வருகிறது. முன்னதாக தெற்மேற்கு பருவமழை காலத்திலும் பரவலாக மழை பெய்ததால், மாநிலம் முழுவதும் உள்ள ஏரிகள், குளங்கள், அணைகள் ஓரளவு நிரம்பியது. இந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக சென்னை உள்பட பல மாவட்டங்களில் பெய்து வரும் மழை மற்றும் அண்டை மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் பெய்து வரும் மழை காரணமாக ஏரிகளில் நீர் நிரம்பி வருகிறது.
இதையடுத்து, பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நீர்வளத் துறை சென்னைக்கு நீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஆகிய 3 முக்கிய நீர்த் தேக்கங்கள், தென் சென்னையில் உள்ள கீழ்க்கட்டளை, நாராயணபுரம் ஆகிய ஏரிகளிலிருந்து உபரி நீரைத் திறந்துவிடப்பட்டு உள்ளது.
நீர்த்தேக்கங்களில் நீர் திறப்பு விவரம்:
தற்போதைய நிலையில், பூண்டி ஏரியில் 2,387 கனஅடி வீதமும், புழல் ஏரியில் 500 கனஅடி வீதமும், செம்பரம்பாக்கம் ஏரியில் 100 கனஅடி வீதமும் உபரி நீர் திறக்கப்பட்டது. மழை தொடர்ந்து பெய்து வருவதால், ஏரிகளுக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்தால், ஏரியில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவும் அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பூண்டி ஏரியில் இருந்து உபரி நீரை 2,287 கன அடி வீதம் வெளியேற்றி வருகின்றனர். பூண்டி ஏரியின் நீர் இருப்பு 2,521 மில்லியன் கனஅடியாக இருந்தது.
புழல் ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர், 13.5 கி.மீ நீளமுள்ள உபரி கால்வாய் வழியாக மணலியில் உள்ள கொசஸ்தலையாறு ஆற்றில் கலக்கிறது. இந்த ஏரியின் முழு கொள்ளளவு 3,300 மில்லியன் கனஅடியில் நீர் இருப்பு 2,732 மில்லியன் கன அடி இருந்தது.
தென் சென்னையில் உள்ள நாராயணபுரம் மற்றும் கீழ்க்கட்டளை ஏரிகளில் இருந்து மொத்தம் 3,420 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. ரேடியல் சாலை (Radial Road), ஓ.எம்.ஆர் (OMR) பகுதிகளில் வெள்ளத்தைக் குறைக்கும் நோக்குடன் நீர்வளத் துறை இந்த ஏரிகளில் இருந்து நீரைத் திறந்து உள்ளது. இந்த ஏரிகளில் இருந்து வெளியேற்றப்படும் நீர், ரேடியல் சாலை வழியாக பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை அடைகிறது. அங்கிருந்து ஓக்கியம் மடுவு, பக்கிங்காம் கால்வாய் வழியாகச் சென்று இறுதியில் கோவளம் கழிமுகத்தில் கலக்கிறது.