கோவை: கொட்டித்தீர்க்கும் கனமழை காரணமாக பவானி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர்.

மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று (27-ஆம் தேதி) உருவாகி உள்ளத. இதன் காரணமாக, சில மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில், கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு இன்று அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. நீலகிரி மாவட்டம், அவலாஞ்சியில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 21.5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
இதனால் ஊட்டிக்கு சுற்றுலா சென்றுள்ள பயணிகள், வெளியே வருவதை தவிர்க்க அம்மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தியுள்ளார்.
மேற்கு மலை தொடர்ச்சி பகுதிகளில் பெய்து வரும் கனமழைகாரணமாக சிறுவாணி நீர் பிடிப்பு பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கோவை குற்றாலம் நேற்று மூடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இரவு முழுவதும் பரவலாக மழை பொய்ததின் காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நொய்யல் ஆற்றின் முதல் தடுப்பணையான சித்திரை சாவடி தடுப்பணையில் வெள்ளநீர் கரை புரண்டு ஓடுகிறது. நீண்ட நாட்களாக மழை இல்லாமல் வரண்டு காணப்பட்ட சித்திரை சாவடி தடுப்பணையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதற்கிடையில் நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையால் 100 அடி கொள்ளளவு கொண்ட பில்லூர் அணையின் நீர்மட்டம் 97 அடியாக உயர்ந்தது. பில்லூர் அணையின் முழு கொள்ளளவான 32.8 டிஎம்சியில் 11.6 டிஎம்சி நீர் நிறைந்துள்ளது, இதன் பில்லூர் அணையில் இருந்து பவானி ஆற்றில் வினாடிக்கு 16,000 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையில் இருந்து 105 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால், பவானி ஆற்றங்கரையோரம் வசிப்போருக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அணையில் இருந்து நீர் அதிகப்படியாக வெளியேற்றப்படுவதால், பவானி ஆற்றங்கரையோரம் இருக்கும் மக்கள் பாதுகாப்பாக இரும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரையோரப் பகுதியில் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறை சார்பில் ஒலிபெருக்கி மூலம் கரையோர மக்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பாதுகாப்பான பகுதியில் தங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், மழை பாதிப்பு மீட்பு பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு பேரிடர் மீட்பு படை 26 நபர்கள் தயார் நிலையில் உள்ளனர்.