சென்னை :
தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் மீனவர்கள் கடலுக்குள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்ததாவது:
“வங்கக் கடலில் உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழக கடலோர மாவட்டங்களின் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். கடற்பகுதியில் பலத்த காற்று வீசுவதால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் கடலுக்குள் செல்ல வேண்டும்.
மற்ற மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது” என்று தெரிவித்தனர்.

தென்மேற்கு பருவமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தற்போது மழை பெய்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி, கோவை, வேலூர், சேலம் மாவட்டத்தில் கனமழையும், காஞ்சிபுரம், விழுப்புரம், திருவள்ளூர், தேனி, தருமபுரி, கடலூர், திருநெல்வேலி, நாகப்பட்டினம், நீலகிரி ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் பரவலாகவும் மழை பெய்துள்ளது.
Patrikai.com official YouTube Channel