தராபாத்

நேற்று பெய்த கடும் மழையால் மூன்று பேர் ஐதராபாத்தில் மரணம் அடைந்துள்ளனர்.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஐதராபாத் நகரில் நேற்று கடும் மழை பெய்துள்ளது.  மூன்று மணி நேரம் பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டு வீட்டுக்குள் மழை நீர் புகுந்தது.  சாலைகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த கடும் மழை காரணமாக பஞ்சாரா ஹில் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் சுவர் இடிந்து விழுந்து ஒரு குழந்தை உட்பட இருவர் மரணம் அடைந்தனர்.   பழைய ஐதராபாத்தில் ஹுசைனி ஆலம் பகுதியில் ஒருவர் மின்சாரம் தாக்கி மரணம் அடைந்துள்ளார்.

பல இடங்களில் வடிகால்கள் நிரம்பி சாலையில் வெள்ளம் ஓடுவதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.  மின்சார கம்பிகள் அறுந்து விழுந்ததால் மின்சாரம் நகரின் பல பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.  சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தா வாகனங்களுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது.

ஐதராபாத் மாநகராட்சி மீட்புப்பணிகளை போர்க்கால அடிப்படையில் துவங்கி உள்ளது.  அவசரப்பணிகளைத் தவிர வேறு எதற்காகவும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  மேலும் அம்பர்பேட், கோல்நாகா, முஷீராபாத், ராஜேந்திரநகர், மொண்டா மார்கெட் ஆகிய பகுதிகளில் வெள்ளத்தால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.   மிர் ஆலம் ஏரி நிரம்பி பக்கத்தில் இருந்த நேரு உயிரியல் பூங்காவுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது.

வானிலை ஆய்வு மையத்தின் தகவலின் படி ராயலசீமாவின் மேல் பகுதியில் ஏற்பட்ட காற்றழுத்த உயர்வு மண்டலமும்,  ஒரிசாவில் இருந்து கேரளாவுக்கு செல்லும் உயர் அழுத்த காற்று மண்டலமும் இந்த மழைக்கு காரணம் என தெரிய வந்துள்ளது.  இந்த மழை ஐதராபாத் மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் இன்னும் 3 நாட்களுக்கு தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.