மும்பை

காத்மா காந்தியுடன் மோடியை ஒப்பிட்டு ராஜ் தாக்கரே கேலி சித்திரம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மகாராஷ்டிரா நவ்நிர்மாண் சேனையின் தலைவரான ராஜ் தாக்கரே சமீப காலமாக பிரதமர் மோடியின் செயல்களை கடுமையாக விமரிசித்து வருகிறார்.   இவர் கேலிச் சித்திரம் வரைவதிலும் திறமை படைத்தவர்.   முன்பு இவர் சிவசேனா பத்திரிகையான மார்மிக் என்னும் பத்திரிகையில் பல கேலிச்சித்திரங்கள் வரைந்துள்ளார்.  இவரது அரசியல் பற்றிய கேலிச் சித்திரங்கள் பலரின் மனதைக் கவர்ந்துள்ளன.

இவர் தனது முகநூல் பக்கத்தில் நேற்று ஒரு கேலிச் சித்திரத்தை வெளியிட்டுள்ளார். அதில் காந்தியும் மோடியும் அருகருகே ஆளுக்கு ஒரு புத்தகத்தை கையில் பிடித்திருப்பது போல் வரைந்துள்ளார்.    இதற்கு தலைப்பாக ஒரே மண்ணின் இரு மைந்தர்கள் என குறிப்பிட்டுள்ளார்.

காந்தி வைத்துள்ள புத்தகத்தில் சத்திய சோதனை (My experiments with Truth) எனவும்,  மோடி வைத்துள்ள் புத்தகத்தில் பொய்களின் பரிசோதனை (My experiments with Lies) எனவும் எழுதப்பட்டுள்ளது.  இந்த பதிவு பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

இது குறித்து மகாராஷ்டிரா மாநில பா ஜ க மக்கள் தொடர்பாளர் மாதவ் பண்டாரியிடம் கருத்து கேட்டுள்ளனர்.  அவர், “ராஜ் தாக்கரேவின் ஒவ்வொரு செயலுக்கும் எங்கள் கட்சி விளக்கம் சொல்ல தேவை இல்லை” என பதிலளித்துள்ளார்.