சென்னை: சென்னைக்கு அதிகனமழை எச்சரிக்கை எதிரொலியாக, முன்னேற்பாடு நடவடிக்கையாக, சென்னையில் 50 இடங்களில் போலீஸ் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழையின்போது தமிழ்நாடு முழுவதும், ஒரு உயிர்சேதம் கூட ஏற்படாத வண்ணம், தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில், வானிலை ஆய்வு மையம், இன்று இரவு முதல் 17ந்தி வரை 4 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், சென்னை உள்பட 5 மாவட்டங்களில் வரும் 16ந்தேதி அதிகனமழை பெய்யும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதைத்தொடர்ந்து, முதலமைச்சர் ஸ்டாலின் இன்று சென்னை மாநகராட்சி மேயர் மற்றும் பல்வேறு துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்தினார். இதைத்தொடர்ந்து சென்னை உள்பட மாநிலம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை தீவிரப்படுத்த உத்தரவிட்டார்.
அதன்படி, சென்னையில், சென்னையில் தண்ணீர் தேங்க வாய்ப்புள்ள 50 இடங்களை கண்டறிந்து, 50 இடங்களில் சிறப்பு கட்டுப்பாட்டு அறைகளை அமைக்க சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார். அதன்படி தற்காலிக கட்டுப்பாட்டு அறை அமைக்கும் பணிகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில், சென்னை மாநகராட்சியும், படகுகள் மற்றும் மழைநீரை வெளியேற்றம் மோட்டார்களை ஆங்காங்கே நிறுத்தி வைத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும், சென்னையில் தண்ணீர் தேங்க வாய்ப்புள்ளதகா கூறப்படும் 180 இடங்களை கண்டறிந்து, அங்கு தீவிர கண்காணிப்புகளை மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளது.
அதன்படி, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 43 இடங்களில் உள்ள மழைநீர் வடிகால்களில் இணைப்புப் பணி நிறைவடையாததால், பணிகளை விரைந்து முடிக்க மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது. . சென்னையில் மழைநீர் தேங்கக்கூடிய 25 இடங்கள் உட்பட 180 வெள்ள அபாய பகுதிகள் கண்டறியப்பட்டு கூடுதல் கவனம் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.