சென்னை: நாளை சென்னை உள்பட 4 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்களுக்கு தேவையான ஆவின் பால் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்து உள்ளார்.
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று சென்னை, நெல்லூர் கடற்கரையை நோக்கி நகரக் கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் இன்று இரவு முதல், 15 16, 17 தேதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனமழை எச்சரிக்கையையடுத்து தமிழ்நாடு அரசு மற்றும் சென்னை மாநகராட்சி அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. சென்னையில் மழைநீர் தேங்கினால் அதை உடனே வெளியேற்ற மோட்டார் பம்பு செட்டுக்கள், மக்களை மீட்க படகுகள் மற்றும்பேரிடர் மீட்பு குழுவினரும் தயார் நிலையில் உள்ளனர். மேலும் 15 ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட கண்காணிப்பு குழுவும், காவல்துறை தரப்பில் கட்டுப்பாட்டு மையங்களும் அமைக்கப்பட்டுஉள்ளது.
இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், வடகிழக்கு மழை காரணமாக, மக்களுக்கு தேவைப்படும் அத்தியாவசிய பொருளான பால் மற்றும் பால் பொருள்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க ஆவின் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறியதுடன், கன்னியாகுமரி முதல் சென்னை வரை கடலோர மாவட்டங்களில் பால் தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
மேலும், ஒவ்வொரு மாவட்ட பால் பண்ணைகளிலும் 500 கிராம் எடை கொண்ட 4,000 பால் பவுடர் பாக்கெட்டுகள் என மொத்தம் 20 டன் பால் பவுடர் இருப்பில் இருப்பதாக கூறியதுடன்,. மேலும் 90 நாள்கள் கெடாமல் இருக்கக்கூடிய அரை லிட்டர் பால் பாக்கெட்டுகள் 50,000 எண்ணிக்கையில் சோழிங்கநல்லூர் பால் பண்ணையில் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.
சென்னை, தாம்பரம் மற்றும் ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட கீழ்கண்ட ஆவின் மண்டல அலுவலகங்களில் 9,000 கிலோ பால் பவுடர் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. ஆவடி, அண்ணசாலை, தி.நகர், பூவிருந்தவல்லி, மாதவரம், விருகம்பாக்கம், நங்கநல்லூர், வேளச்சேரி, சோழிங்கநல்லூர் ஆகிய ஆவின் பாலகங்களில் தலா 1,000 கிலோ இருப்பு உள்ளது. கால்நடை தீவனம் சுமார் 500 டன், தாதுப்பு கலவை சுமார் 50 டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.