சென்னை,

சென்னையில் நேற்று முதல் பெய்து வரும் கனமழை காரணமாக பல இடங்களில் தண்ணீர் தேங்கி சென்னை மக்களுக்கு மீண்டும் 2015ம் ஆண்டை நினைவுபடுத்தி உள்ளது.

அதற்கேற்றார்போல சென்னை அடையாறில் தண்ணீர் பெருக்கெடுத்து செல்கிறது. சென்னை அசோக்நகர் காசி திரையரங்கம் அருகே உள்ள அடையாற்றின் தரைப்பாலத்தை ஒட்டி தண்ணீர் செல்கிறது. அதனால் வாகன ஓட்டிகள் தரைப்பாலத்தில் செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த தரைப்பாலத்தின் ஒருபுறம் ஆகாயத்தாமரை சூழ்ந்தும் மற்றொரு பக்கத்தில் தண்ணீர் அடித்துச் செல்வதுமாகக் காட்சி யளிக்கிறது. கனமழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தரைப்பாலம் எப்போது வேண்டுமானாலும் நீரில் மூழ்கும் நிலை இருப்பதால் வாகனஓட்டிகள், பொதுமக்கள் இந்த தரைப்பாலம் வழியே செல்வதை தவிர்க்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் கரையோர மக்களும்  வேறு இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. வட சென்னையில் பல பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டு, கழிவு நீரும் கலந்து சுகாதார பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

சென்னையில் கடந்த 2015ம் ஆண்டு நடைபெற்ற வெள்ளப்பெருக்கு மற்றும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. கடந்த நூறாண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்துள்ள மழை நகரை முழுமையாகப் நிலைகுலையச் செய்திருந்து.

இயற்கை நீர்நிலைகளும், வடிகால்களும் முறையாக பராமரிக்கப்பட்டிந்ருதால், சென்னை இப்படியான வரலாறு காணாத நெருக்கடியைத் தவிர்த்திருக்கலாம் என குற்றம் சாட்டப்பட்டது.

தமிழக அரசின் ஆவணங்களின்படி கடந்த 1980களில் 19 பெரிய ஏரிகளின் பரப்பளவு 1,130ஹெக்டேர்களாக இருந்தது, 2000ம் ஆண்டுகளின் முற்பகுதியில் 645 ஹெக்டேர்களாக சுருங்கியுள்ளன. சென்னை மாநகரில் 2,847 கிமீ நீளத்துக்கு சாலைகள் உள்ள நிலையில், மழைநீர் கால்வாய்கள் 855கிமீ மட்டுமே உள்ளன என்றும், இதுவே பெருமழையின் போது, சாலைகளில் நீர் ஓடுவதற்கும் தேங்கி நிற்பதற்கும் காரணமாகின்றன.

அதன் காரணமாக அந்த ஏரிகளின் கொள்ளளவு குறைந்து போனதன் காரணம் குறித்தும், ஏரிகள் வீடுகளாக ஆக்கிரமிக்கப்படுவது குறித்தும் பேசப்பட்டது. இதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஆனால், ஒரு சில நாட்கள் மட்டும் அரசு நடவடிக்கை எடுப்பதுபோல நாடகம் ஆடி, மீண்டும் தனது பழைய நிலையையே தொடர்ந்து.

இதன் காரணமாக இந்த ஆண்டு மீண்டும் 2015ம் ஆண்டு பாதிப்பை சென்னை சந்திக்கும் சூழல் உருவாகி உள்ளது.
சென்னையின் பல இடங்களில் மழைநீர் கால்வாய்களில் குப்பைக் கூளங்களால் அடைப்புகள் ஏற்பட்டுள்ளன, அவை உடனடியாக தூர்வாரி சரிசெய்யப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

ஆனால், அரசோ முன்னெச்சரிக்கை எடுத்துள்ளதாக கூறி உள்ள நிலையில், கடந்த இரண்டு நாள் மழைக்கே சென்னை நாறிபோய் உள்ளது.

கன மழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம் பகுதிகளில், அடையாறு கரையோர பகுதி மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.   இதன் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டம் வரதராஜபுரம், மகாலட்சுமி நகர், ராயப்பா நகர் உள்ளிட்ட ஆறு புறநகர் பகுதி மக்கள் ஊரைவிட்டு வெளியேறி மாற்று இடம் நோக்கி செல்லத்தொடங்கி உள்ளனர்.

தாம்பரம் அருகே முடிச்சூர் பகுதியில் இப்போதே முழங்கால் அளவு தண்ணீர் தேங்கி உள்ளது. கடந்த 2015ம் ஆண்டு மழை வெள்ளத்தின்போது முடிச்சூர் பகுதி அதிக அளவு பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஒரு நாளை மழைக்கே தண்ணீர் தேங்க தொடங்கி உள்ளது.

வானிலைமையம் இன்னும் சில நாட்கள் மழை தொடரும் என அறிவித்துள்ள நிலையில், இந்த பகுதி கடுமையான பாதிப்பை சந்திக்க நேரிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய இரண்டு நாள் மழைக்கே சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதியில் ஏற்பட்டுள்ள பாதிப்பு  2015ம் ஆண்டை நினைவுபடுத்துகிறது. மக்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகி, இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

 

இயற்கையான நீர்நிலைகளை பராமரிப்பது தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்படாதது, தற்போது சென்னையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு முக்கியமான காரணம் என குற்றம் சாட்டப்படுகிறது.