சென்னை

நேற்று இரவு சென்னையில் விடிய விடிய கனமழி பெய்துள்ளது.

கடந்த சில நாட்களாக  பரவலாக மழை பெய்து வருகிறது. தெலங்கானா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த சில தினங்களாக ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் பெய்து வரும் தொடர் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அவ்வப்போது லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் செப்டம்பர் 7ம் தேதி வரை மழை தொடரும என வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே தெரிவித்துள்ளது.

சென்னையில் ஆயிரம் விளக்கு, அண்ணாசாலை, திருவல்லிக்கேணி, மெரினா, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், முகப்பேர், அம்பத்தூர், ஆவடி, அயனப்பாக்கம், அண்ணணூர், திருமுல்லைவாயல் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று விடிய விடிய கனமழை பெய்துள்ளது. அதிகபட்சமாக சென்னை நுங்கம்பாக்கத்தில் 29.6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

மேலும் செங்கல்பட்டு, தருமபுரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மற்றும் கோவை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் நேற்று இரவு மிதமான முதல் கனமழை பெய்தது.

சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.