சென்னை: சென்னையில் இன்று கனமழை கொட்டித் தீர்க்கும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் நேற்று இரவு முதல் தற்போது வரை மழை கொட்டி வருகிறது. இந்த மழை மேலும் 3மணி நேரம் நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மழை காரணமாக சாலைகளில் தேங்கியுள்ள தண்ணீரால் மாணவ மாணவிகள், பொதுமக்கள், வேலைக்கு செல்வோரும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில், சென்னையில் பரவலாக கனமழை கொட்டித் தீர்க்கும் என்று தனியார் வானிலை ஆராய்ச்சியாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். சென்னை மட்டுமன்றி அண்டை மாவட்டங்களான செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் அடுத்த 10 நாள்களுக்கு தீவிர மழைக்கு வாய்ப்பிருப்பதாக அவர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
வெப்பச்சலனத்தால் தமிழக உள் மாவட்டங்களிலும், கடலோர மாவட்டங்களிலும் அடுத்த இரு வாரங்களுக்கு மழை பெய்யக்கூடும். சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் பகல் வேளையில் வெயில் வாட்டினாலும், மாலை வேளையில் இடி மின்னலுடன் மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில் சில ட்வீட்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர், “ராமநாதபுரத்தில் இருந்து சென்னை வரை சிவப்பு தக்காளி. நீண்ட இடைவெளிக்குப் பிறகு மிகத் தீவிரமான மழை மேகங்கள். இது ஒரு ஆரம்பம் தான் அடுத்த 10 நாட்களுக்கு இதுபோல இன்னும் அதிகமாகப் பார்க்கப் போகிறோம். இந்த மழை மேகங்கள் மெல்லக் கடலோர பகுதிகளை நோக்கி நகரும். இதில் குறுகிய நேரத்தில் அதிக தீவிர மழை பெய்யும்.
சென்னையில் நேற்று மாலை முதலே மாநகரின் சுற்றுவட்டாரத்தில் பல்வேறு பகுதிகளிலும் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்த நிலையில் நள்ளிரவு முதல் மீண்டும் மழை கொட்டி வருகிறது.