சென்னை: நவம்பர் 4-ஆம் தேதி முதல் 4 நாட்கள் சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தமிழக வானிலை மையம் மற்றும் தனியார் வானிலை ஆய்வாளரான தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் போன்றோர் ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில், இன்று காலை முதல் சென்னையில் மழை பெய்து வருகிறது. இந்திய வானிலை மையம் மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் அக்டோபர் 28ந்தேதியுடன் தென்மேற்குப் பருவமழை முடிவடைந்து 29ந்தேதி முதல் வடகிழக்குப் பருவமழை தொடங்கியது.பருவமழை தொடங்கிய முதல்நாளே சென்னை உள்பட பல மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. மேலும், தென்மேற்கு வங்கக் கடலில் உருவான வளிமண்டலச் சுழற்சி காரணமாக, மாநிலம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்தது.
மழையால் பாதிப்பா..? தொடர்புகொள்ள அவசர உதவிஎண்கள்
இந்த நிலையில், நவம்பர் 4-ஆம் தேதி முதல் சென்னையில் நல்ல மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதுபோல தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜானும், நவம்பர் 4ந்தேதி முதல் நல்ல மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்திருந்தார்.
அதன்படி, இன்று காலை முதலே சென்னை உள்பட பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சென்னையில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் சுமார் 9 மணி முதல் கனமழை கொட்டி வருகிறது. இதனால் பொதுமக்கள் தங்களது அன்றாடக பணிகளுக்கு செல்வதில் சிக்கல் எழுந்துள்ளது. மேலும் சாலைகளில் தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடுவதால் வாகனங்கள் செலவதிலும் சிரமம் ஏற்பட்டு உள்ளது.
ஏற்கனவே அறிவித்தபடி, 4 நாட்கள் மழை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையமும் எச்சரிக்கை விடுத்துள்ளது. வடகிழக்கு பருவமழை வலுப்பெற்றுள்ளதால் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக, மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது.
மஞ்சள் எச்சரிக்கை (Yellow Alert) :
வானிலை மிகவும் மோசமாக இருப்பதை தெரிவிப்பதே இந்த மஞ்சள் எச்சரிக்கை ஆகும். இது போன்ற நேரங்களில் மக்கள் தங்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் தயார் நிலையில் வைத்துக் கொள்வது நல்லது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வடகிழக்குப் பருவ மழை வலுவடைவதன் காரணமாகத் தமிழகம் மற்றும் கேரளத்தில் மழை தீவிரமடைய தொடங்கி உள்ளது . தென்மேற்கு வங்கக் கடலையொட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் சென்னையில் பரவலாக மழை பெய்யும். அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் கேரளத்தில் பெரும்பாலான பகுதிகளில் மழையும் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், தமிழகத்தில் வரும் 7 ஆம் தேதி வரையிலும் கேரளத்தில் வரும் 6 ஆம் தேதி வரையிலும் ஒருசில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.
மழையில் எத்தனை வகை மழை உள்ளது என தெரியுமா? காணுங்கள் நமது தமிழ்மொழியின் அமுதமழையை…