சென்னை: நீலகிரி, வால்பாறை மற்றும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இன்று கனமழை வெளுத்துவாங்கும் என்றும், ஆகஸ்டு 15க்குள் மேட்டூர் அணை அதன் முழு கொள்ளவான 120 அடியை எட்டும் என்றும்  தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மேற்குதொடர்ச்சி மலை பகுதி மற்றும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கனத்த மழை பெய்து வருகிறது. இதனால்,  தமிழகத்தின் நீலகிரி, கோவை, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக  மழை பெய்து வருகிறது. இதே போல கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களிலும் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. தொடரும் கனமழையால் நீர்நிலைகள் அணைகள், ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. காவிரியிலும் தண்ணீர் பெருக்கெடுத்து வருகிறது. இதனால் மேட்டூர் அணையும் நிரம்பி வருகிறது.

இந்த நிலையில்,  தமிழ்நாடு வெதர்மேன் மழை குறித்து அறிவிப்பை  தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில்,   காவிரி நீர் பிடிப்பு பகுதிகளான குடகு மற்றும் கே ஆர் எஸ் மற்றும் ஹாரங்கி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை தொடரும் என தெரிவித்துள்ளார். இதே போல் ஹஸன் மாவட்டத்தில் உள்ள சிக்மங்களூர், ஹேமாவதி நீர் பிடிப்பு பகுதிகளிலும் கன மழை தொடரும். கபிணி நீர்ப்பிடிப்பு பகுதியான வயநாட்டில் கனமழை தொடரும்.

  மேலும் வால்பாறை, நீலகிரி மற்றும் அவலாஞ்சி அப்பர் பவானி பகுதிகளில் இன்று கனமழை தொடரும் என்றும்  இதேபோல் மேட்டூர் அணை சுதந்திர தினத்திற்குள் முழு கொள்ளளவான 120 அடியை எட்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று மாலை அல்லது இரவு மழைக்கு வாய்ப்புள்ளதாகவும்,  மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளை தவிர தமிழகத்தின் மற்ற பகுதிகளில் இன்று வறண்ட வானிலை நிலவும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதனிடையே கேரள மாநிலத்தில் இன்று பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. எர்ணாகுளம், திருச்சூர், மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கான மஞ்சள் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு குஜராத் கடற்கரை முதல் வடக்கு கேரளா வரை நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் தென்மேற்கு பருவமழையின் தீவிரமே இதற்கு காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.