சென்னை,

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உட்பட 9 மாவட்டங்களில் மிகக் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறினார்.

சென்னையில் நேற்று இரவு முதலே விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகினர்.  சென்னையில் பெய்து வரும் மழை காரணமாக பெரும்பாலான இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளதால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன்,

தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் இலங்கைக்கு அருகே நேற்று உண்டான வளிமண்டல மேலடுக்கு சழற்றி தொடர்ந்து அதே இடத்தில் நீடிக்கிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்துக்கு கடலோர மாவட்டங்களில் அனைத்து இடங்களிலும் கன மழையும், உள் மாட்டங்களில் பல இடங்களில் மிதமான மழையும் பெய்யும்.

கன மழையைப் பொறுத்தவரை கடலோர மாவட்டங்களான திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், நாகை, தஞ்சை, திருவாரூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் புதுவையில் ஓரிரு இடங்களிலும் கன மழை முதல் மிகக் கன மழை பெய்யக் கூடும்.

தென் கடலோர மாவட்டங்களான தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகியவற்றில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக் கூடும். சென்னையில் பெரும்பாலான இடங்களில் கன மழை பெய்யும் என்று தெரிவித்தார்.

இன்று காலை 8.30 மணியுடன் நிறைவு பெற்ற மழை நிலவரம்:

தமிழகத்தில் அதிகபட்சமாக (நாகை) ஆனைக்காரன்சத்திரம் பகுதியில் 9 செ.மீ. மழை பதிவானது. சீர்காழியில் 6 செ.மீ.

மழையும், நாகப்பட்டினம், சென்னை விமான நிலையம், காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் 5 செ.மீ. மழையும், திருத்தணி, செங்கல்பட்டு – 4 செ.மீ. மழையும், சிதம்பரம், தாம்பரம், கடலூர், சாத்தான்குளம் பகுதிகளில் 3 செ.மீ. மழையும் பதிவானது.

தமிழகத்தில் இதே நிலை இன்னும் இரண்டு நாட்களுக்கு நீடிக்கும் என்றும் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.