சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், நெல்லை, குமரி உள்பட 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக  வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த அக்டோபர் மாதம் 15ந்தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை உள்பட கடற்கரை பகுதிகளில் இரவு நேரங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தற்போது மீண்டும் வளிமண்டல சுழற்றி காரணமாக  மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்ட கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு ஆந்திராவை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக  தமிழகத்தில் இன்று 17 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

அதன்படி,  திருநெல்வேலி, கன்னியாகுமரி, நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திரு்சி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்கில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக் கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  நவம்பர் முதல் வார இறுதியில் தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தீவிரமடைந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  தமிழகத்தை நோக்கி நகரும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால் நவ.7-11-ம் தேதி வரை மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.