விருதுநகர்: தென்மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக இன்று முதல் அக்டோபர் 21ம் தேதி வரை ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி மலை கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக,  ஐப்பசி மாதம் சனி பிரதோஷம், அமாவாசை நாட்களில் சதுரகிரி கோயிலுக்கு செல்லத் தடை விதித்து அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி,   இன்று முதல் (17ந்தேதி)  அக்டோபர் 21ம் தேதி வரை 5 நாட்கள்  ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் சாப்டூர் வனச்சரகத்தில் கடல் மட்டத்தில் இருந்து 3,500 அடி உயரத்தில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் உள்ளது. தினசரி காலை 6 முதல் 10 மணி வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக சதுரகிரி மலைப் பாதையில் உள்ள நீரோடைகள் மற்றும் கட்டாறுகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், சதுரகிரி மலைப் பகுதியில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால், பக்தர்களின் பாதுகாப்பு கருதி அக்டோபர் 21ம் தேதி வரை சதுரகிரி மலையேற தடை விதிக்கப்படுவதாக வனத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால்,  பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.