சென்னை: மொந்தா புயல் உருவாகி உள்ளதன் காரணமாக, சென்னையில் அதிகாலை முதலே அடை மழை பெய்து வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நாளையும் மழை தொடரும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக இன்று சென்னை உட்பட 5 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவாகி நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை 2.30 மணியளவில் மொந்தா புயலாக வலுப்பெற்றது. இது மேலும் வலுவடைந்து, நாளை மாலை அல்லது இரவில் சென்னையை அடுத்த ஆந்திராவின் மச்சிலிப்பட்டினம்- கலிங்கப்பட்டினம் இடையே கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த புயல் கரையைக் கடக்கும் போது அதிகபட்சமாக மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்த புயல் தற்போது சென்னைக்கு 560 கி.மீ தென் கிழக்கில் மையம் கொண்டுள்ளது. இது மெதுவாக நகர்ந்துவருகிறது. இதன் காரணமாக, சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அதிகாலை முதலே பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது. . வங்க கடலில் உருவான இந்த புயல் மணிக்கு 15.கி.மீ வேகத்தில் நகர்வதாகவும் கூறியுள்ளது. ஆந்திராவை நோக்கி மோந்தா புயல் கரையை நெருங்கி வரும் நிலையில், சென்னை உள்பட பல பகுதிகளில் மிதமானதுமுதல் கனமழை பெய்து வருகிறது. இந்த மழை மேலும் அதிகரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக சென்னை புறநகர் பகுதிகளான ரெட்ஹில்ஸ், மணலி, மாதவரம், கோயம்பேடு, எழும்பூர், திருவொற்றியூர், கீழ்ப்பாம் சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், அடையாறு, மேடவாக்கம், வேளச்சேரி, தாம்பரம் உள்பட புறநகர் பகுதிகளிலும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. சென்னையில், அடைமழைழு பெய்து வருகிறது. இதனால், சாலையில் தண்ணீர் தேங்குவதால், பணிக்கு செல்லும் ஊழியர்களும், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகளும் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை உட்பட 5 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாகவும், இதனால் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு ஆகிய 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதால் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னையில் நாளை வரை மழை தொடர வாய்ப்பு உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் தகவல் தெரிவித்தது.