சென்னை: வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், வங்கக்கடலில் உருவாக்கி உள்ள காற்றழுத்த தாழ்வு காரணமாக, தொடர்ந்து கன மழை பெய்து வருவதால்,  9 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர் மற்றும் நெல்லை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருவதால் அங்கு மட்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர்  26ம் தேதி தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அன்றுமுதல் மழை பெய்யத் தொடங்கி உள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், தென் மேற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தீவிரமடைந்து வருவதால், கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து மழை கொட்டி வருகிறது. இதனால்  தமிழகத்திற்கு இந்திய வானிலை மையம் ஆரஞ்சு அலர்டும் விடுத்துள்ளது. இந்த நிலையில்தான் சில மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.