மிர்புர்: பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கடும் சேதம் ஏற்பட்டு, 26 பேர் வரை உயிரிழந்துள்ளதோடு, நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீநகரிலிருந்து 140 கி.மீ. தொலைவில் உணரப்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.8 என்பதாக பதிவானது. இந்த நிலநடுக்கம் நேற்று மாலை 4.32 மணிக்கு உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் அதிர்வு வடஇந்தியப் பகுதிகளான டெல்லி, சண்டிகர் மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகியவற்றிலும் உணரப்பட்டது.

மேலும், பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் மற்றும் லாகூர் ஆகிய நகரங்களிலும் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் சாலைகள் பிளந்து கிடக்கின்றன. இதனால் பல வாகனங்களும் சேதமடைந்துள்ளன.

சாலைகள் இரண்டாகப் பிளந்து ஜீலம் நதியில் விழுந்ததால், வீடுகளுக்கு நீர் புகுந்தது. பாக்., ஆக்ரமிப்பு காஷ்மீரின் பிம்பர், கோட்லி ஆகிய பகுதிகள் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளன. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது.

மேலும், அடுத்த 24 முதல் 48 மணிநேரங்களில் மற்றொரு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும், எனவே, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பாகிஸ்தான் வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது.