சென்னை: கரூர் சம்பவம் குறித்து சட்டபேரவையில் இன்று காரசார விவாதம் நடைபெற்றது. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, கரூர் சம்பவம் குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.
எடப்பாடியின் கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின், மற்றும் அமைச்சர்கள், மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்தனர். அப்போது உயிரிழந்தவர்களின் உடல் 3 மணி நேரத்தில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது என்பது தவறான தகவல் தெரிவித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று தவெக தலைவர் விஜய் கூட்ட நிகழ்வின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது குறித்து விவாதிக்கப்பட்டது. விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி, கரூர் குறித்து பேசினாலே, முதலமைச்சர் ஏன் பதற்றம் அடைகிறார் என கேள்வி எழுப்பியதுடன், தவெக நிகழ்ச்சிக்கு “முழுமையான பாதுகாப்பு கொடுத்திருந்தால் அசம்பாவிதத்தை தவிர்த்திருக்கலாம்” இந்த விஷயத்தில் அரசும் காவல்துறையும் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தல், அசம்பாவிதத்தை தவிர்த்திருக்கலாம். ஆனால், அதை செய்ய அரசு தவறிவிட்டது என கடுமையாக குற்றம் சாட்டியதுடன், ஒரே இரவில் உடற்கூறாய்வு செய்ய அவசியம் என்ன என்பது உள்பட பல கேள்விகளை எழுப்பியவர், கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தில் பிரசாரம் செய்ய அதிமுகவுக்கு அனுமதி மறுத்த காவல்துறை, தவெகவுக்கு எப்படி அனுமதி கொடுக்கப்பட்டது என கேள்வி எழுப்பினார்.
மேலும், கரூர் கூட்ட நெரிசலில் சென்ற ஆம்புலன்ஸ் வாகனங்களில் தி.மு.க ஸ்டிக்கர் வந்தது எப்படி? அரசியல் செய்வது யார்? நள்ளிரவு நேரத்தில் பிரேத பரிசோதனை நடைபெற்றது ஏன்? என்ன அவசரம்? 39பேரின் உடல்கள் காலை 8 மணிக்குள்ளாக பிரேத பரிசோதனை செய்யப்பட்டது ஏன்? என்று பல்வேறு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். இதற்கு ஆளுட்கட்சியினர் இடைஞ்சல் செய்ததால், , ” கரூர் சம்பவம் குறித்து பேசுவதற்கு உரிமை இல்லையா? என கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து பேசிய முதல்வர் ஸ்டாலின், கரூர் துயரத்தைக் கேள்விப்பட்டதும் என்னால் வீட்டில் இருக்க முடியவில்லை; அதனால்தான் உடனடியாக அன்று இரவே கரூருக்குச் சென்றேன்” என்றார். மேலும், “எதிர்க்கட்சித் தலைவர் நியாயமான கேள்விகள் கேட்டால் அதற்குரிய பதில் கிடைக்கும். நீங்கள் கூட்டணிக்கு ஆள் சேர்த்து வருகிறீர்கள். அதனால்தான் கரூர் துயர சம்பவத்தை அரசியலாக்கி, இப்படி பேசி வருகிறீர்கள் என்பது மக்களுக்குத் தெரியும்!” என டப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி. கொடுத்தார்.
“கள்ளக்குறிச்சி சம்பவத்தில் அமைச்சர்கள் அனைவரும் அங்கு சென்றார்கள். ஆனால் கரூர் சம்பவம் அதுபோன்றது அல்ல. அப்பாவி மக்கள் மிதிபட்டு, இறந்துள்ளார்கள். அதனால்தான் நான் நேரில் சென்று பார்த்தேன்!” என கூறிய முதல்வர், “கரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள பிணவறையில், இறந்த அனைத்து உடல்களையும், குளிர்சாதன பெட்டியில் வைப்பதற்கு போதிய வசதி இல்லாத காரணத்தினால், அன்றைய இரவில் உடற்கூராய்வு செய்வதற்கு மாவட்ட ஆட்சித் தலைவரின் சிறப்பு அனுமதி பெற்று, 24 மருத்துவர்கள் மற்றும் 16 உதவிப் பணியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு உடற்கூராய்வு செய்யப்பட்டது என்றார்.
“கரூர் துயரச் சம்பவத்தை தமிழ்நாடு அரசு சட்டப்படி, விரைந்து கையாண்டது. அனுமதி வழங்கல், மருத்துவ உதவி, நிவாரண விநியோகம் அனைத்தும் சரியான நடைமுறையில் நடந்தன. இதுபோன்ற துயரங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் தடுக்க வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.”
கரூர் துயரச் சம்பவம் யாரும் எதிர்பாராத துன்பமான நிகழ்ச்சி. அதனை சட்டமன்றம் கூடுகையில் தெரிவிக்க வேண்டும், இதுதான் நடைமுறை. அந்தவகையில் தான் விளக்கம் அளிக்கப்பட்டதே தவிர, எதிர்க்கட்சி தலைவர் கேள்விக்கு பதிலளிக்கவில்லை. எடப்பாடி பழனிசாமி திரித்து கூறுவது சரியல்ல என முதல்வர்,
எனது ஐம்பது ஆண்டு காலப் பொதுவாழ்க்கையில் எத்தனையோ நிகழ்ச்சிகளை நடத்தி இருக்கிறேன். பார்த்திருக்கிறேன். மாநாடுகள், பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் ஆகியவற்றை நடத்துபவர்கள் அதற்குரிய சட்ட திட்டங்களுக்கும், நெறிமுறைகளுக்கும் உட்பட்டுதான் நடத்தி வருகிறார்கள். கட்டுப்பாடுகளை மீறும்போது, அதனால் பாதிக்கப்படுவது தொண்டர்கள் தான். அதனை மனதில் வைத்து பொறுப்போடு செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினார்.
“கரூர் துயரச் சம்பவத்தை கேள்விப்பட்டதும் என்னால் வீட்டில் இருக்க முடியவில்லை. அன்று இரவே நானும் கரூருக்குச்சென்று, பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூறினேன். அரசின் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டன. அமைச்சர்கள் பலரும் அங்கு சென்று பணியாற்றினார்கள் என்றவர், இந்த சம்பவத்துக்கு காரணம் தவெக தலைவர் தாமதமாக வந்ததே என்றவர், கரூர் நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு அரசின் காவல் துறையின் சார்பாக கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதில் 3 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், காவல் துணைக் கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், ஆயுதப்படை காவலர்கள் என மொத்தம் 606 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
காவல்துறையைப் பொறுத்தவரை, வழக்கமாக அரசியல் பரப்புரை கூட்டங்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்புக் காவலர்களின் எண்ணிக்கையைவிட அதிகமாகவே வழங்கப்பட்டிருந்தது என தெரிவித்தார்.
எடப்பாடியின் கேள்விக்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் , இறந்தவர்களின் உடல்களை உடற்கூறாய்வு செய்ய மாவட்ட ஆட்சியரின் சிறப்பு அனுமதி பெற்றப்பட்டது என்று கூறியதுடன், 14 மணி நேரம் உடற்கூறாய்வு நடைபெற்றது என்றவர், இந்த பணி மறுநாள் மாலை 4மணிக்குத்தான் நிறைவு பெற்றது என்றார்.
ஆனால், 3 முதல் 4மணி நேரத்தில் பிரேத பரிசோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது. அது தவறான தகவல் என்று கூறியவர், பிரேத பரிசோதனையில் சந்தேகம் ஏற்படுத்துவது ஏற்புடையது அல்ல என்றார்.
மேலும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு குஜராத்தில் நடைபெற்ற ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்த 29 பேரின் உடல்களுக்கு 12மணி நேரத்தில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது என்பதையும் சுட்டிக்காட்டினார்.