சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பல பகுதிகளில் கடுமையான வெப்பம் நிலவி வருவதுடன் வெப்ப அலையும் காணப்படுகிறது. இதை தமிழ்நாடு அரசு மாநில பேரிடராக அறிவித்தது உள்ளது.
அதன்படி, வெப்ப அலையால் உயிரிழப்புகள் நேர்ந்தால் அவர்களது குடும்பத்தினருக்கு ரூ.4லட்சம் நிவாரணம் அளிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், முதல் ஒரு சில நாட்கள் மட்டும் நல்ல மழை பெய்தது. அதன்பிறகு வெப்பம் வாட்டி வதைக்கிறது. வெப்ப அலைகளின் தாக்கம் அவ்வப்போது தமிழகத்தில் வாடி வதைத்து வரும். இதனால், பல உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழக அரசு வெப்ப அலையை மாநில பேரிடராக அறிவித்துள்ளது. மேலும், வெப்ப அலையால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு மாநில பேரிடர் நிதியிலிருந்து ரூ.4 லட்சம் நிவாரணமும் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியிட்டுள்ள செய்தியில் , “வெப்ப அலை பாதிப்பை மாநில பேரிடராக அறிவிக்கப்படுகிறது. வெப்ப அலை பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களுக்கு நான்கு லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படும். தண்ணீர்ப் பந்தல் அமைத்துக் குடிநீர் வழங்கப் பேரிடர் நிதியைப் பயன்படுத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வெப்ப அலையின் பாதிப்பு அதிகமாக இருக்கக்கூடிய நேரத்தில் வருவாய்த்துறை மற்றும் மருத்துவத்துறை இணைந்து பொதுமக்களுக்குப் பாதுகாப்பான வசதிகளை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
அதிக அளவு பொதுமக்கள் கூடக்கூடிய இடங்களில் பொதுமக்களுக்கு ஏற்படும் நீரிழப்பைத் தடுப்பதற்காக உப்பு சர்க்கரை கரைசல் வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்கள் தங்களைத் தற்காத்துக் கொள்வதற்காகப் பல இடங்களில் குடிநீர் வழங்குவதற்கான வசதிகள் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும். இதற்கான அனைத்து விதமான நடவடிக்கையும் எடுக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.