சென்னை:

கோடை வெயில் தமிழக மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. கத்திரி வெயில் தொடங்குவதற்கு முன்பே 110 டிகிரி வெப்பத்தை தாண்டிவிட்டது. கத்திரி தொடங்கிய பிறகும் வெயிலின் தாக்கம் ஏறுமுகமாக தான் இருக்கிறது.

இந்நிலையில் வரும் நாட்களில் தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் பல பகுதிகளில் அனல் காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது

குறிப்பாக வடக்கு தமிழகத்தில் இந்த அனல் காற்று வீசும் என்று வானிலை ஆராய்ச்சி மைய புயல் எச்சரிக்கை மைய அலுவலர் ராஜேந்திரன் இன்று வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கோவை, ஈரோடு, கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் அனல் காற்று வீசும். அதேபோல் புதுச்சேரி மாநிலத்திலும் பரவலாக அனல் காற்று வீசும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.