சென்னை: திமுக அமைச்சர் ஐ.பெரியசாமி, முன்னாள் அமைச்சர் வளர்மதி மீதான வழக்குகளில் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து சீராய்வு வழக்கு பதிந்துள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

தமிழ்நாட்டில் சமீப காலங்களில் தற்போதைய அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகள் அடுத்தடுத்து ரத்து செய்யப்படுவதும், விடுவிக்கப்படுவதுமாக தொடர்ந்து வந்தன. இது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், நீதிமன்றங்களின் மீதும் அவப்பெயரை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஒபிஎஸ்  மற்றும் தற்போதைய திமுக அமைச்சர்கள், பொன்முடி, கேகேஎஸ்எஸ்ஆர், தங்கம் தென்னரசு போன்றோர் வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டதை கடுமையாக சாடிய உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், லஞ்ச ஒழிப்பு காவல்துறை பச்சோந்தி போல ஆட்சியாளர்களுக்கு ஏற்றார்போல மாறிவிடுகிறது என விமர்சனம் செய்தார்.

இந்த நிலையில்,  தற்போதைய திமுக அமைச்சர் ஐ.பெரியசாமி, அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் வளர்மதி மீதான வழக்குகளில் சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்ததை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்   தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளார்.

தி.மு.கவின் மூத்த தலைவரும், தற்போது ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராகவும் இருப்பவர் ஐ.பெரியசாமி. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அமைச்சரவையிலும் முக்கியமான துறை அமைச்சராக பதவி வகித்தார். இவர் கடந்த  2008-ம் ஆண்டில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அமைச்சராக இருந்தபோது, தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான வீட்டை மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பாதுகாவலராக இருந்த கணேசன் என்பவருக்கு, ஒதுக்கியதில் முறைகேடு செய்ததாக புகார் கூறப்பட்டது.

இந்த புகார் தொடர்பாக ஐ.பெரியசாமி உள்ளிட்டோர்மீதுஅ.தி.மு.க ஆட்சியின் போது 2012-ம் ஆண்டு,  லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு நிலுவையில் இருந்து வந்தது. இதற்கிடையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும்,  தன்மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி அமைச்சர் ஐ.பெரியசாமி சார்பில் எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜெயவேல் முன்பு கடந்த மார்ச் 18-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அமைச்சர் ஐ.பெரியசாமி சார்பில் வழக்கறிஞர்கள் ரகுநாதன், ஏ.சரவணன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். இந்த வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வீட்டு வசதி வாரிய வீடு ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான வழக்கிலிருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்து, உத்தரவிட்டார்.

இதேபோல கடந்த  2001-2006 வரையிலான அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்த வளர்மதி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக சொத்துக் குவிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கிலிருந்து வளர்மதி உள்ளிட்டோரை விடுவித்து ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம், 2012-ம் ஆண்டு உத்தரவிட்டது.

இந்த நிலையில் முறைகேடு வழக்கில் ஐ.பெரியசாமி விடுவிக்கப்பட்டது, சொத்துக் குவிப்பு வழக்கில் வளர்மதி விடுவிக்கப்பட்டது ஆகிய வழக்குகளை எதிர்த்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளார். இவ்விரு வழக்குகளிலும் உத்தரவுகளை மறு ஆய்வு செய்யும் வகையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துள்ளார். இவ்விரு வழக்குகளும் இன்று (செப்.8) விசாரணைக்கு வர உள்ளது.