சென்னை
தமிழக அரசு மயானங்களில் உள்ள சாதிப்பெயர் பலகைகளை அகற்ற வேண்டும் எனச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உலகில் சமரசம் உலாவும் இடம் மயானம் என பொதுவாகச் சொல்லப்படுகிறது. ஆனால் அங்கும் சாதிவாரியான பிரிவுகள் அதிக அளவில் காணப்படுவது என்பதே உண்மையாகும். பல இடங்களில் ஒவ்வொரு சாதியினருக்கும் தனித்தனி மயானங்கள் ஏற்படுத்தப்பட்டுப் பிரிவினை அதிக அளவில் உள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம் இன்று தமிழக அரசுக்குப் பிறப்பித்துள்ள உத்தரவில், “அனைத்து மயானங்களிலும் சாதிப் பெயர்ப் பலகைகள் உள்ளன. அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும். எந்த ஒரு சாதிப்பாகுபாடுமின்றி தமிழக அரசு ஒவ்வொரு ஊரிலும் அனைவருக்கும் பொதுவான மயானங்களை அமைக்க வேண்டும்.
தற்போது ஒரு சில உள்ளாட்சி அமைப்புக்கள் ஏற்கனவே பொது மயானங்கள் அமைத்துள்ளன. அரசு அந்த உள்ளாட்சி அமைப்புக்களை ஊக்குவிப்பது மூலம் மேலும் இத்தகைய நடவடிக்கைகள் அதிகரிக்க உதவ வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.