கமதாபாத்

டந்த இரு ஆண்டுகளில் குஜராத் மாநிலத்தில் 184 சிங்கங்கள் மரணம் அடைந்ததற்கு விளக்கம் கேட்டு குஜராத் அரசுக்கும் மத்திய அரசுக்கும் குஜராத் உயர்நீதிமன்றம் நோட்டிஸ் அனுப்பி உள்ளது.

ஆசியாவில் தற்போது சிங்கங்கள் குஜராத் வனப்பகுதிகளில் மட்டுமே உள்ளன.   கடந்த 2015ஆம் ஆண்டு எடுத்த கணக்கெடுப்பின் படி குஜராத் வனப்பகுதிகளில் 523 சிங்கங்கள் வசித்து வந்தன.   கிர் சிங்கங்கள் சரணாலயம் என அழைக்கப்படும் இந்த வனப்பகுதியின் இடையே அமரேலி மாவட்டத்தில் ஒரு ரெயில்வே பாதை செல்கிறது.   அத்துடன் இந்த கிர் வனப்பகுதியில் சாலைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

குஜராத் சட்டசபையில் இந்த மாதம் 5 ஆம் தேதி அன்று அம்மாநில வனத்துறை அமைச்சர் கண்பத் வசாவா, “கடந்த 2 ஆண்டுகளில் கிர் சிங்கங்கள் சரணாலயத்தில் 184 சிங்கங்கள் மரணம் அடைந்துள்ளன.   இதில் 32 சிங்கங்கள் அகால மரணம் அடைந்துள்ளன.   இந்த அகால மரணங்கள் பொதுவாக 4 காரணங்களால் ஏற்படுகின்றன.

சாலை விபத்துக்கள், ரெயில்வே பாதையில் அடிபடுதல்,  சுற்றுச் சுவர் இல்லாத வனக் கிணறுகள்,  மற்றும் விவசாய நிலங்களில் அமைக்கப்பட்டுள்ள மின் வேலிகள் ஆகியவையே அந்த காரணங்கள் ஆகும்.  தற்போது ரெயில்வே பாதையில் வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.    சாலைகளில் வேகத்தடைகள் அதிகரிக்கப்படுள்ளன.  சுற்றுச்சுவர் இல்லாத கிணறுகளுக்கு சுற்றுச்சுவர் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.    மின் வேலி அமைக்க தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது”  என தெரிவித்தார்.

இதையொட்டி சுவோ மோட்டோ  (தன்னிச்சையாக வழக்கு பதிதல்) முறையில் குஜராத் உயர் நீதிமன்றம் வழக்கு பதிந்து விசாரணையை தொடங்கியது.   இந்த வழக்கு நீதிபதிகள் சுபாஷ் ரெட்டி மற்றும் வி எம் பஞ்சோலி ஆகியோரின் அமர்வின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.   அந்த அமர்வு குஜராத் அரசுக்கும் மத்திய அரசுக்கும் நோட்டிஸ் அனுப்பி உள்ளது.

அதில், “கடந்த 2 ஆண்டுகளில் 184 சிங்கங்கள் மரணம் அடைந்துள்ளன.   இவை மிகவும் அதிகமான எண்ணிக்கை ஆகும்.    இத்தனை சிங்கங்கள் மரணம் அடைந்ததற்கான காரணங்கள் என்ன?  இதற்காக அரசு என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தது?   அப்படி எடுக்கப்பட்டிருந்தால் அதையும் மீறி எவ்வாறு இந்த மரணங்கள் ஏற்பட்டன?  இது குறித்து உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும்”  என குறிப்பிடப் பட்டுள்ளது.